/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய வளையப்பந்து போட்டி தமிழக அணிகள் 'சாம்பியன்'
/
தேசிய வளையப்பந்து போட்டி தமிழக அணிகள் 'சாம்பியன்'
ADDED : மார் 31, 2025 03:31 AM

சென்னை:ஒடிசாவில் நடந்த 48வது, தேசிய சீனியர் வளையப்பந்து போட்டியில், இருபாலர் பிரிவிலும், தமிழக அணி கோப்பை வென்று மீண்டும் சாதித்தது.
அகில இந்திய வளையப்பந்து கூட்டமைப்பு மற்றும் ஒடிசா மாநில வளையப்பந்து கழகம் இணைந்து 48வது தேசிய சீனியர் வளையப்பந்து போட்டியை நடத்தின.
ஒடிசா மாநிலம், புவனேஸ்வர், கலிங்கா உள்விளையாட்டு அரங்கில் நடந்த இப்போட்டியில், நாடு முழுதும் இருந்து 25 அணிகள் சார்பில், 450 வீரர்கள் பங்கேற்றனர்.
கடந்த 25ல் துவங்கிய போட்டிகள், நேற்று முன்தினம் முடிந்தன. ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் மற்றும் குழு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
இதில், தமிழ்நாடு ஆண்கள் அணிக்காக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வைரமுத்து, கார்த்திக் ராஜா, முத்துச்செல்வம், திருப்பத்துாரின் செந்தமிழன், அறிவழகன், நாமக்கல்லின் ராசிபுரத்தைச் சேர்ந்த அபிஷேக் ஆகியோர் பங்கேற்றனர்.
பெண்கள் அணிக்காக, நாமக்கல்லின் ராசிபுரத்தைச் சேர்ந்த ரம்யா, அம்பிகா, தக் ஷிதா, மேனகா, திருப்பத்துாரின் அபிநயா, கரூரின் யாஷிகா ஆகியோர் பங்கேற்றனர்.
ஆண்கள் பிரிவில் துவக்கம் முதலே, தமிழக அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி,இறுதிப் போட்டியில், 3 - 0 செட் கணக்கில், புதுச்சேரி அணியை வீழ்த்தியது.
அதேபோல் பெண்கள் பிரிவிலும், இறுதிப் போட்டியில், 3 - 0 செட் கணக்கில் புதுச்சேரி அணியை வீழ்த்தி, தமிழக பெண்கள் அணி வெற்றி பெற்றது.
பெண்கள் ஒற்றையர் போட்டியில், ரம்யா, தக் ஷிதா முறையே தங்கம், வெள்ளி வென்று அசத்தினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில், வைரமுத்து வெண்கலம் வென்றார்.
இரட்டையர் ஆண்கள் பிரிவில் அறிவழகன், கார்த்திக் ராஜா ஜோடி, தங்கம் வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் அபிஷேக், மேனகா ஜோடி தங்கம் வென்றது.
ஒட்டுமொத்த வெற்றியின்படி, தமிழக வளையப்பந்து அணி 34க்கு 26 புள்ளிகள் பெற்று, தொடர்ந்து நான்காவது முறையாக, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.