/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தண்டையார்பேட்டை பேருந்து நிலைய கட்டுமான பணி விறுவிறு
/
தண்டையார்பேட்டை பேருந்து நிலைய கட்டுமான பணி விறுவிறு
தண்டையார்பேட்டை பேருந்து நிலைய கட்டுமான பணி விறுவிறு
தண்டையார்பேட்டை பேருந்து நிலைய கட்டுமான பணி விறுவிறு
ADDED : ஏப் 21, 2025 02:09 AM

தண்டையார்பேட்டை:தண்டையார்பேட்டை- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், 50 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட பேருந்து பணிமனை உள்ளது.
இந்த பணிமனையை நவீனப்படுத்த வேண்டுமென, சட்டசபையில் ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., எபினேசர் கோரிக்கை வைத்தார். இதையேற்று, வட சென்னை வளர்ச்சி திட்டத்தில், தண்டையார்பேட்டை பணிமனையை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
வடசென்னை வளர்ச்சி நிதியில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம், தண்டையார்பேட்டை பேருந்து நிலையம் 1.38 ஏக்கர் பரப்பளவில், 26.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. கடந்த 2024, மார்ச்சில் பூமி பூஜை நடந்தது. தற்போது கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தண்டையார்பேட்டை பேருந்து நிலையத்தில், ஒரே நேரத்தில், 15 பேருந்துகள் உள்ளே சென்று வர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கட்டடத்தின் தரைதளத்தில் அமைக்கப்படும் வாகன நிறுத்தத்தில், 137 இருசக்கர வாகனங்கள் நிறுத்தலாம். தரைதளத்தில் பயணியருக்கான உணவகங்கள், கடைகள், காத்திருக்கும் இடம், ஏ.டி.எம்., தாய்மார்கள் பாலுாட்டும் அறை உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன.
முதல் தளத்தில் பேருந்து நிலைய பணியாளர்களுக்கான அலுவலக அறை, ஆலோசனை அறை, வாகன ஓட்டுனர் பயிற்சிக்கூடம், கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு வருகிறது. 2ம் தளத்தில் பேருந்து ஓட்டுனர்களுக்கான, 'ஏசி' ஓய்வறை, இரண்டு லிப்ட் வசதிகளும், 20க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் இடமும் அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'தண்டையார்பேட்டை பேருந்து நிலைய கட்டுமான பணி 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் ஆறு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்' என்றனர்.

