/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையை சீரமைத்த ஆட்டோ ஓட்டுனர்கள்... 'நமக்கு நாமே!' அலட்சிய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம்
/
சாலையை சீரமைத்த ஆட்டோ ஓட்டுனர்கள்... 'நமக்கு நாமே!' அலட்சிய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம்
சாலையை சீரமைத்த ஆட்டோ ஓட்டுனர்கள்... 'நமக்கு நாமே!' அலட்சிய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம்
சாலையை சீரமைத்த ஆட்டோ ஓட்டுனர்கள்... 'நமக்கு நாமே!' அலட்சிய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம்
ADDED : மே 28, 2024 11:34 PM

ஆவடி: நான்கு ஆண்டுகளாக தொடர் புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், 'நமக்கு நாமே' என்ற கருத்தை முன்வைத்து, அரசு அதிகாரிகளையோ, அரசியல்வாதிகளையோ நம்பாமல், ஆட்டோ ஓட்டுனர்கள் ஒன்று சேர்ந்து களமிறங்கி சொந்த செலவில் சாலையை சீரமைத்து, அப்பகுதியினர் பாராட்டை பெற்றனர்.
ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம், இந்து கல்லுாரி ரயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ளது, கோபாலபுரம் முதல் பிரதான சாலை. இச்சாலையில், 20 மற்றும் 37வது வார்டுகளை, கோபாலபுரம் கிழக்கு முதல் பிரதான சாலை இணைக்கிறது.
இதில் அமைந்துள்ள கோபாலபுரம் 1 முதல் 13வது தெருக்களின் சுற்றுவட்டாரத்தில், 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பகுதிவாசிகள், இந்த சாலையைத் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
சாலை குறுகலாக உள்ளதால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் அவசர சேவை வாகனங்கள் உள்ளே சென்று வர முடியாமல், பகுதிவாசிகள் அவதிப்பட்டனர். கடந்த 2020ல் இப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டது.
அதன் பின் குடிநீர் வாரியம், புது சாலையை குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டியது. வீடுகளுக்கு இணைப்பு வழங்க சாலையின் நடுவில் பள்ளம் தோண்டியதால், வேறு வழியின்றி பகுதிவாசிகள் இதற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.
ஆனால், பணி முடிந்தும் குடிநீர் வாரியத்தினர், சாலையை சீரமைக்காமல் விட்டனர்.
இதனால், சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட பள்ளம், நாளுக்கு நாள் பெரிதாகி, வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கினர்.
மேலும், குடிநீர் வாரியம் அமைத்த குழாய், சாலையில் தெரியும்படி இருந்ததாலும், விபத்து அபாயம் நீடித்தது.
ஆவடி மாநகராட்சியில், துறைகள் ஒருங்கிணைப்பு இல்லாததே, சாலையின் இந்த மோசமான நிலைமைக்கு காரணம் என, பகுதிவாசிகள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக தொடர்ந்து அதிகாரிகளிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன.
இரண்டு வார்டுகள் சம்பந்தப்பட்டு இருப்பதால், எந்த வார்டை சேர்ந்த அதிகாரிகள் சீரமைப்பது என்ற குழப்பத்தில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், அரசியல் கட்சியினரிடமும் முறையிட்டனர். அவர்களும் கண்டு கொள்ளவில்லை. வாங்கும் சம்பளத்தில் இருந்து பல்துலக்கும் பிரஷ் வரை அனைத்திற்கும் வரி கட்டியும், அடிப்படை வசதியான சாலையை கூட பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், அரசு நிர்வாகத்தின் மீது, பகுதிவாசிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
சந்தா பணம்
பட்டாபிராம், கோபாலபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் தங்களின் சங்கத்தின் செயல்பாடுகளுக்காக சந்தா வசூலிப்பது வழக்கம்.
அரசு நிர்வாகமும், அதிகாரிகளும் இப்பகுதி மக்களை அலட்சியப்படுத்திய நிலையில், ஆட்டோ ஓட்டுனர்கள் ஒன்று சேர்ந்து இப்பிரச்னைக்கு தீர்வு காண தீர்மானித்தினர். சாலையை சீரமைக்க தங்களுக்குள் வசூல் செய்தனர்.
சாலையை புதிதாக போடும் அளவுக்கு நிதியை திரட்ட முடியவில்லை. இதனால், சாலையில் மிக மோசமான நிலையில் இருந்த பகுதிகளை மட்டுமாவது சீரமைக்க முடிவு செய்தனர். இதற்கென பணியாளர்களை அழைத்தால், அவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்பதால், ஆட்டோ ஓட்டுனர்களே நேரடியாக களமிறங்கினர்.
நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு துவங்கி இரண்டே மணி நேரத்தில், சிமென்ட் கலவை கொண்டு சாலையின் மோசமான பகுதிகளை 'பேட்ச் ஒர்க்' செய்து சீரமைத்தனர்.
அரசு நிர்வாகமும், அரசியல்வாதிகளும் அலட்சியப்படுத்திய நிலையில், ஆட்டோ ஓட்டுனர்கள் ஒற்றுமையாக களம் இறங்கி இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வு ஏற்படுத்தியது, பகுதிவாசிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்து மகிழ்ந்தனர்.
சாலை சேதமடைந்து 15க்கும் மேற்பட்ட பள்ளங்கள் இருந்தன. பள்ளங்களில் இறங்கி ஏறி, ஒருமுறை சவாரி சென்று வர, கூடுதலாக 10 நிமிடங்கள் தேவைப்படுகிறது. நாங்கள் மட்டுமின்றி, இப்பகுதிவாசிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவ அயடைந்து வந்தனர். இதனால், மாநகராட்சி அதிகாரிகளை நம்பாமல், இரவோடு இரவாக சாலையை தற்காலிகமாக சீரமைத்தோம். ஆனால், எங்களால் புதிதாக சாலை அமைக்க முடியாது. எனவே, இனியாவது இந்த சாலையை சீரமைக்க அரசு அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோபாலபுரம் ஆட்டோ ஓட்டுனர்கள்.