ADDED : பிப் 16, 2026 06:41 AM

அம்பத்துார்: அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையத்தில், எட்டு மாதங்களாக பயன்பாட்டிற்கு வராமல் இருந்த மின் விளக்குகள், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையத்தில் இருந்து பிராட்வே, கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும், 50,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2024ம் ஆண்டு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கூரை, 17 மின்விளக்குகள் மற்றும் 12 மின்விசிறிகள் அமைக்கப்பட்டன.
இவை, கடந்தாண்டு ஜூலை மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இப்பணியை மேற்கொண்ட, பொதுப்பணித்துறை வசம், நிதி சென்று சேராததால், அடுத்த நாளே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எட்டு மாதங்களாக மின் இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்ததால், இரவு நேரத்தில் அப்பகுதியே கும்மிருட்டாக மாறியது.
சுற்றுவட்டார கடைகளின் சிறு வெளிச்சத்தில் பேருந்து நிலையம் இயங்கும் அவல நிலை ஏற்பட்டது. கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் அரங்கேறின.
இது குறித்து, கடந்த 10ம் தேதி நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, இரு தினங்களுக்கு முன், அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையத்திற்கு மீண்டும், மின் இணைப்பு வழங்கப்பட்டு மின்விசிறிகள் மற்றும் மின்விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்து, வெளிச்சம் கிடைத்துள்ளது.
பயணியரின் பாதுகாப்பும் உறுதி செய்யப் பட்டுள்ளது.
