/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காலாவதி குப்பை எரி உலைக்கு மா.க., வாரியத்தின் அனுமதி காலம்... மேலும் 5 ஆண்டு இயக்கியதால் மாநகராட்சிக்கு 'குட்டு'
/
காலாவதி குப்பை எரி உலைக்கு மா.க., வாரியத்தின் அனுமதி காலம்... மேலும் 5 ஆண்டு இயக்கியதால் மாநகராட்சிக்கு 'குட்டு'
காலாவதி குப்பை எரி உலைக்கு மா.க., வாரியத்தின் அனுமதி காலம்... மேலும் 5 ஆண்டு இயக்கியதால் மாநகராட்சிக்கு 'குட்டு'
காலாவதி குப்பை எரி உலைக்கு மா.க., வாரியத்தின் அனுமதி காலம்... மேலும் 5 ஆண்டு இயக்கியதால் மாநகராட்சிக்கு 'குட்டு'
ADDED : மே 02, 2025 11:54 PM
சென்னை :மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதித்த காலம் முடிந்தும், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரி உலையை மேலும் ஐந்தாண்டுகள் இயக்கிய விவகாரத்தில், சென்னை மாநகராட்சி மீது பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுபோல மாநிலம் முழுதும் உள்ள எரிஉலைகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்கவும் அரசுக்கு, தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, மணலி சின்னமாத்துாரில், மக்கும் தன்மை கொண்ட திடக்கழிவுகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் குப்பை எரி உலை திட்டத்தை, சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.
இதற்கான, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய செயல்பாட்டு அனுமதி, 2020 மார்ச் 31ல் முடிந்துவிட்டது.
ஆனால், அனுமதியை புதுப்பிக்காமல், ஐந்து ஆண்டுகளாக சின்னமாத்துாரில் குப்பை எரி உலை, சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.
குப்பை எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை, துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி அருண்குமார் தியாகி, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சின்ன மாத்துார் குப்பை எரி உலையில், 2020ம் ஆண்டு முதல் கண்டறியப்பட்ட குறைகளை சரி செய்வதற்காக, சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. எரி உலைக்கான அனுமதியை புதுப்பிக்க மாநகராட்சி விண்ணப்பித்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சின்னமாத்துார் குப்பை எரி உலை ஓராண்டுக்கும் மேலாக செயல்படவில்லை. அங்குள்ள இயந்திரங்களை சரிசெய்யும் பணிகள் நடந்து வருகின்றன' என்று தெரிவித்தார்.
அனுமதி காலம் முடிந்த பிறகும் குப்பை எரி உலை இயக்கப்பட்டது குறித்து, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நோட்டீசுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை. இது அதிருப்தி அளிக்கிறது.
டெண்டர் இறுதி செய்யப்பட்டு, பணிகள் முடிப்பதற்கான காலக்கெடு குறித்த விபரங்களை, மாநகராட்சி தாக்கல் செய்ய வேண்டும்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுகளின்படி, தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி எடுக்க வேண்டும்.
எரி உலை செயல்படுகிறதா, இல்லையா என்பதை மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் குப்பை எரியுலை போன்றவற்றின் செயல்பாடுகளை, அதன் கமிஷனர்கள், சம்பந்தப்பட்ட அரசு செயலர்கள் கண்காணிக்க வேண்டும்.
இது தொடர்பாக, தமிழக அரசு மட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜூன் 17ல் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.