/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை வெட்டு பணிக்கு விதித்த தடையை நீக்கியது மாநகராட்சி
/
சாலை வெட்டு பணிக்கு விதித்த தடையை நீக்கியது மாநகராட்சி
சாலை வெட்டு பணிக்கு விதித்த தடையை நீக்கியது மாநகராட்சி
சாலை வெட்டு பணிக்கு விதித்த தடையை நீக்கியது மாநகராட்சி
ADDED : ஜன 05, 2025 10:16 PM
சென்னை:சென்னையில், சாலை வெட்டு பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம், காவல் துறைக்கு தெரிவித்துள்ளது.
சென்னையில் மின்சாரம், தொலை தொடர்பு, இணையதள சேவை போன்றவற்றுக்கான கேபிள்களை பதிக்க, சாலை வெட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், முறையாக விண்ணப்பித்து மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும்.
காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு, மாநகராட்சி நிர்வாகம் இது தொடர்பான தகவல்களை தெரிவிக்கும். உரிய அனுமதியின்றி யாரும் இது போன்ற பணிகளில் ஈடுபடுவதை தடுக்க, இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
பொதுவாக, பருவமழை காலத்தில் சாலை வெட்டு பணிகளை அனுமதிக்கக்கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது. சாலை வெட்டு பணிக்கான அனுமதி வழங்குவதில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் சாலை வெட்டு பணிகளுக்கு 2024 செப்., 30ல் மாநகராட்சி தடை விதித்தது. இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி கமிஷனர், குமரகுருபரன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
பருவமழையை முன்னிட்டு சாலை வெட்டு பணிகளுக்கு அனுமதி வழங்க தடை விதிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில் பல்வேறு சேவை துறைகள், கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் நிறுவனங்கள் விண்ணப்பித்தால் விதிகளுக்கு உட்பட்டு, சாலை வெட்டு பணிக்கு அனுமதிக்கலாம் என, அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலம் முடிந்த நிலையில் கேபிள் பதிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பல்வேறு நிறுவனங்கள் அனுமதி கோரி உள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.