/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சதுர அடிக்கு ரூ.5,612தான் செலவு * சி.எம்.டி.ஏ., விளக்கம்
/
கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சதுர அடிக்கு ரூ.5,612தான் செலவு * சி.எம்.டி.ஏ., விளக்கம்
கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சதுர அடிக்கு ரூ.5,612தான் செலவு * சி.எம்.டி.ஏ., விளக்கம்
கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சதுர அடிக்கு ரூ.5,612தான் செலவு * சி.எம்.டி.ஏ., விளக்கம்
ADDED : ஆக 08, 2025 12:54 AM
சென்னை, 'கிளாம்பாக்கம் காவல் நிலையம் கட்ட, சதுர அடி, 5,612 ரூபாய் மட்டுமே செலவானது' என, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமான, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில், 18.26 கோடி ரூபாயில் புதிய காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. காவல் நிலையம் கட்ட இவ்வளவு செலவாகுமா என்ற கட்டுமான வல்லுநர்கள் சந்தேகம் எழுப்பியது குறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இது தொடர்பாக, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் கோ.பிரகாஷ் அனுப்பிய விளக்க அறிக்கை:
கிளாம்பாக்கத்தில், 88 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் பேருந்து முனையத்துக்கு தினமும், 2,500 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. சாதாரண நாட்களில், 50,000 பேரும், பண்டிகை நாட்களில், 2 லட்சம் பேரும் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கு வந்து செல்லும் மக்களின் பாதுகாப்புக்காக இந்த வளாகத்தில், காவல் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது.
இதன்படி, 18.26 கோடி ரூபாய் மதிப்பில், 32,534 சதுர அடி பரப்பளவில், புதிய காவல் நிலைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இதில் ஒரு சதுர அடிக்கு, 11,000 ரூபாய் கட்டுமான செலவு ஆனதாக தகவல் வெளியாகி உள்ளது. உண்மையில், ஒரு சதுர அடிக்கு, 5,612 ரூபாய் தான் செலவிடப்பட்டுள்ளது.
காவல் நிலைய அலுவலக செயல்பாட்டுக்கு தேவையான, மேஜைகள், நாற்காலிகள், குளிர்சாதன வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சூரியசக்தி மின் விளக்குகள், மின் துாக்கிகள் ஆகியவற்றுக்கான செலவுகளும் இதில் அடங்கும்.
மேலும் ஒவ்வொரு தளமும், 14 அடி உயரத்துக்கு வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, முன்பக்க முகப்பு தோற்றம் முழுக்க அலுமினிய உறை பூச்சுத்தகடு மற்றும் இரட்டை அடுக்கு கண்ணாடியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***