ADDED : அக் 27, 2024 12:14 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர், சண்முகம்புரத்தைச் சேர்ந்தவர் அமுதா, 52. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே அமர்ந்து, இட்லி மாவு விற்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, பேரன் சாய், 10, வீட்டினுள் துர்நாற்றம் வீசுவதாக பாட்டியிடம் கூறியுள்ளார். அமுதா உள்ளே சென்று பார்த்துள்ளார். தொடர்ந்து, சமையல் அறைக்குள் சென்ற அமுதா, தீப்பெட்டி எடுத்து உரசியதாக தெரிகிறது. அப்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும், சிலிண்டர் வெடித்து வீட்டின் கூரை பலத்த சத்தத்துடன் பெயர்ந்து விழுந்துள்ளது.
சத்தம் கேட்டு, அவரது மகன் வெங்கட்ராஜ் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அமுதா தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு 40 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். முதற்கட்ட விசாரணையில், சிலிண்டரின் ரெகுலேட்டர் வால்வு சரியாக மூடப்படாததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. சாத்தங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.