/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காத்திருந்து திருடனை பிடித்த டெலிவரி ஊழியர்
/
காத்திருந்து திருடனை பிடித்த டெலிவரி ஊழியர்
ADDED : அக் 05, 2024 11:59 PM
சென்னை, மொபைல் போன் திருடியவரை மூன்று நாட்களாக டாஸ்மாக் கடை அருகேயே காத்திருந்து, உணவு டெலிவரி ஊழியர் பிடித்துக் கொடுத்துள்ளார்.
அயனாவரம், அறிஞர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் லுார்துநாதன் ஜோசப், 34. உணவு டெலிவரி ஊழியர். கடந்த, 30ம் தேதி, கொன்னுார் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்கச் சென்றார். அப்போது மர்மநபர்கள் அவரிடம், 26 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை திருடிச் சென்றனர்.
டாஸ்மாக் மதுக்கூட உரிமையாளர் ஜெகதீஷ் என்பவரின் உதவியுடன், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை லுார்துநாதன் ஜோசப் பார்த்துள்ளார். அதில் மொபைல் போன் திருடர்களை அடையாளம் கண்டுபிடித்துள்ளார்.
அவர்கள் மீண்டும் மதுக்கூடத்திற்கு வருவர் என எதிர்பார்த்து, அங்கேயே மூன்று நாட்களாக கண்காணித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, மொபைல் போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் மதுக்கூடத்திற்கு வந்துள்ளனர். உறவினர் கார்த்திகேயன் என்பவரின் உதவியுடன், ஒருவரை மடக்கி பிடிக்க மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிப்பட்டவரை அயனாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், திருவொற்றியூரைச் சேர்ந்த சூர்யா, 24, என்பது தெரியவந்தது. அவரை நேற்று கைது செய்த போலீசார், தலைமறைவான சந்தோஷ், 24 என்பவரை தேடி வருகின்றனர்.