/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உபகரணங்கள் ஏதும் இல்லாததால் நாய்கள் இனவிருத்திமையம் 'வெறிச்'
/
உபகரணங்கள் ஏதும் இல்லாததால் நாய்கள் இனவிருத்திமையம் 'வெறிச்'
உபகரணங்கள் ஏதும் இல்லாததால் நாய்கள் இனவிருத்திமையம் 'வெறிச்'
உபகரணங்கள் ஏதும் இல்லாததால் நாய்கள் இனவிருத்திமையம் 'வெறிச்'
ADDED : ஆக 14, 2025 11:47 PM
சென்னை :சைதாப்பேட்டையில், ஆறு கோடி ரூபாயில் நாட்டு நாய்கள் பாதுகாப்பு மையம் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் மூன்று நாய்களே உள்ளன. தேவையான உபகரணங்கள் இன்றி, மையம் வெறிச்சோடியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு கால்நடை பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், ஆறு கோடி ரூபாயில், 11,773 சதுர அடியில், ஐந்து கட்டடங்களுடன் உள் நாட்டு இன நாய் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை, ஜூலை 5ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தற்போது அம்மையத்தில், மூன்று நாய்கள் மட்டுமே உள்ளன. மேலும், அவற்றின் சிகிச்சைக்கு, உணவு தயாரிக்க தேவையான உபகரணங்கள் ஏதும் இல்லை. 'சிசிடிவி' கேமரா வசதியில்லை. பணிகள் முழுமை அடையாமலேயே திறக்கப்பட்டு விட்டதாக, செல்லப்பிராணிகள் வளர்ப்போர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கால்நடைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இம்மையத்திற்கு, நாய்கள் வாங்குவதற்கான பணிகள் நடந்துவருகின்றன. தரமான கன்னி, கோம்பை, ராஜபாளையம் போன்ற நாட்டு இன நாய்களை தேர்வு செய்து, பரிசோதித்து வாங்க வேண்டும்.
மேலும், மூன்று முதல் ஆறு மாதம் வரையுள்ள குட்டிகளை வாங்க வேண்டும். அப்போது தான், அவை மனிதர்களிடம் பழகும். உணவு போன்றவை வைத்து பராமரிக்க எளிமையாக இருக்கும்.
அந்த வகையில், இதில், 32 நாய் குட்டிகளை வளர்க்க முடிவு செய்துள்ளோம். தற்போது, மூன்று நாய்கள் உள்ளன. மீதம் 29 நாய் குட்டிகளை கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது.
உபகரணங்கள் பொருத்த வரை, உயரதிகாரிகள் முடிவு செய்வது தான். தேவையான உபகரணங்கள் பட்டியலை தயார் செய்து அனுப்பியுள்ளோம். நிதி நிலைமையை பொறுத்து, விரைவில் கொள்முதல் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***