/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கீழே கிடந்ததாக குழந்தையை ஒப்படைக்க வந்தவரே 'தந்தை' என்பது அம்பலம்
/
கீழே கிடந்ததாக குழந்தையை ஒப்படைக்க வந்தவரே 'தந்தை' என்பது அம்பலம்
கீழே கிடந்ததாக குழந்தையை ஒப்படைக்க வந்தவரே 'தந்தை' என்பது அம்பலம்
கீழே கிடந்ததாக குழந்தையை ஒப்படைக்க வந்தவரே 'தந்தை' என்பது அம்பலம்
ADDED : ஆக 11, 2025 01:31 AM
சென்னை:கீழே கிடந்ததாக, அரசு மருத்துவமனையில் குழந்தையை ஒப்படைக்க வந்த இளைஞரே, அக்குழந்தையின் தந்தை என்பது விசாரணையில் அம்பலமானது.
சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு, வந்த வாலிபர், கீழே கிடந்ததாக பச்சிளம் குழந்தையை கொண்டு வந்து, இரவு பணியில் இருந்த மருத்துவர்களிடம் கொடுத்துள்ளார்.
அவர்கள், போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். போலீசாரின் விசாரணையில், குழந்தையை எடுத்து வந்து ஒப்படைக்க வந்த இளைஞர், நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்த பிரவீன், 21, என்பதும், அவரே குழந்தையின் தந்தை என்பதும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது:
சேலத்தைச் சேர்ந்த, 21 வயது மாணவி, கோட்டூர்புரத்தில் உள்ள விடுதியில் தங்கி, சென்னை பல்கலையில் படித்து வருகிறார். இவரும், பிரவீனும் காதலித்து வருகின்றனர்.
பிரவீன் சைதாப்பேட்டையில் தங்கி, டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகிறார். அவ்வப்போது, காதலர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள விடுதியில், தம்பதி என, அறை எடுத்து தங்கியுள்ளனர். இதனால், மாணவி கர்ப்பமானார். கருவை கலைக்க மனமின்றி வளர்த்து வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, கோட்டூர்புரத்தில் உள்ள விடுதி அறையில், மாணவிக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தோழியர் ஊருக்கு சென்று விட, தான் மட்டுமே அந்த அறையில் இருந்துள்ளார். குழந்தை பிறந்தது பற்றி, மொபைல் போன் வாயிலாக, காதலன் பிரவீனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக விடுதிக்கு சென்ற பிரவீன், குழந்தையுடன் தன் காதலியை ஆட்டோவில், திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு இருவரும், 'குழந்தை கீழே கிடந்ததாக, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து விடுவோம்' என, முடிவு செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 1:30 மணியளவில், கட்டைப்பை ஒன்றில் குழந்தையை படுக்க வைத்து, பிரவீன் ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றுள்ளார்.
அங்கு இரவுப்பணியில் இருந்த டாக்டர்களிடம், நான் திருவல்லிக்கேணி கஸ்துாரிபாய் மருத்துவமனை அருகே நடந்து சென்றபோது, இந்த குழந்தை கீழே கிடந்தது. அதை எடுத்து வந்ததாக கூறியுள்ளார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் பிரவீனிடம் மேலும் விசாரித்தபோது, 'எங்கள் காதல் விவகாரம் இருவரின் வீட்டிற்கும் தெரியாது; எங்களுக்கும் வேலை கிடையாது. இருவரும் படித்து வருகிறோம். இப்படி இருக்கும் சூழலில், எங்களால் குழந்தையை எப்படி வளர்க்க முடியும் என்ற குழப்பம் ஏற்பட்டது.
'குழந்தை கீழே கிடந்ததாக நாடகமாடினேன். நாங்கள் பெற்ற குழந்தை, தொட்டில் குழந்தை திட்டத்திலாவது வளர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில், இந்த முடிவை எடுத்தோம்' என, அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, போலீசார் தனியார் விடுதியில் தங்கி இருந்த மாணவியிடம் விசாரித்துள்ளனர். அவரும் பிரவீன் சொன்னதையே தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மாணவியை மீட்டு, குழந்தையுடன் கஸ்துாரிபாய் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, இருவரும் நலமுடன் உள்ளனர்.
பிரசவம் நடந்தது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள விடுதி என்பதால், இச்சம்பவம் குறித்த விபரங்களை அங்குள்ள போலீசாருக்கு திருவல்லிக்கேணி போலீசார் ஒப்படைத்துள்ளனர். பிரவீன் மற்றும் மாணவியின் பெற்றோரை போலீசார் சென்னைக்கு வரவழைத்து உள்ளனர்.
வழிதவறிய உறவில் பிறந்த குழந்தைகளை பலரும் குப்பை தொட்டி உள்ளிட்ட இடங்களில் வீசி செல்லும் நிலையில், 'தொட்டில் குழந்தை திட்டத்திலாவது' தங்களது குழந்தை வளரட்டும் என, இருவரும் முடிவெடுத்துள்ளது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.