/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு புகுந்து சுருட்டிய 'பிக் அப்' பெண் ஓட்டுநர்
/
வீடு புகுந்து சுருட்டிய 'பிக் அப்' பெண் ஓட்டுநர்
ADDED : அக் 16, 2024 12:05 AM
ஆவடி,ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் செந்தாமரை, 40; அரசுப் பள்ளி ஆசிரியை.
கடந்த மாதம் 30ம் தேதி காலை, ஆவடி காமராஜர் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, 'ஓலா' தளத்தில் ஆட்டோ 'புக்' செய்தார்.
ஆட்டோ வந்ததும், வீட்டு சாவியை ஜன்னல் அருகே வைத்து, செந்தாமரை, ஆட்டோவில் ஏறி சென்றார். இதை நோட்டமிட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர், செந்தாமரையுடன் பேச்சு கொடுத்தபடி, அவரை உறவினர் வீட்டில் இறக்கி விட்டுச் சென்றார்.
செந்தாமரை, மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்தபோது, வீடு திறந்து கிடந்தது. உள்ளே, பீரோவில் வைத்திருந்த ஒரு சவரன் கம்மல், 50,000 ரூபாய் ஆகியவை திருடு போனது தெரிந்தது.
இது குறித்த புகாரின்படி விசாரித்த ஆவடி போலீசார், திருட்டில் ஈடுபட்ட திருநின்றவூர், விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா, 27, என்பவரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து, முக்கால் சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.