/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பசுமை தீர்ப்பாயம் வல்லுநர் குழு அமைத்தும் அரசு... அலட்சியம் தொழிற்சாலை கழிவுகளால் நாசமாகும் கொரட்டூர் ஏரி
/
பசுமை தீர்ப்பாயம் வல்லுநர் குழு அமைத்தும் அரசு... அலட்சியம் தொழிற்சாலை கழிவுகளால் நாசமாகும் கொரட்டூர் ஏரி
பசுமை தீர்ப்பாயம் வல்லுநர் குழு அமைத்தும் அரசு... அலட்சியம் தொழிற்சாலை கழிவுகளால் நாசமாகும் கொரட்டூர் ஏரி
பசுமை தீர்ப்பாயம் வல்லுநர் குழு அமைத்தும் அரசு... அலட்சியம் தொழிற்சாலை கழிவுகளால் நாசமாகும் கொரட்டூர் ஏரி
ADDED : ஜூலை 16, 2025 11:38 PM

கொரட்டூர், : ஆக்கிரமிப்பு மற்றும் தனியார் தொழிற்சாலை கழிவுகளால், அம்பத்துார், கொரட்டூர் ஏரி நாசமடைந்து வருகிறது. ஏரியை பாதுகாக்க, ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பசுமை தீர்ப்பாயம் வல்லுநர்கள் குழு அமைத்தும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. முதல்வர் ஸ்டாலினிடம் முறையிட்டும், ஏரியை பாதுகாக்க எந்த முன்னெடுப்பு பணிகளையும் மேற்கொள்ளாமல், அரசு அலட்சியம் காட்டி வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அம்பத்துார், கொரட்டூர் ஏரி 930 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து காணப்பட்டது. பல கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இருந்த இந்த ஏரி, ஆக்கிரமிப்புகளால், தற்போது 590 ஏக்கர் பரப்பாக சுருங்கிவிட்டது. ஏரியை சுற்றி கிருஷ்ணா நகர், ஆர்.கே.தட்சன் நகர், முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர் போன்ற நகர்கள் உருவாகின.
அம்பத்துார் மண்டலத்தில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை.
இதன் காரணமாக, கொரட்டூர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் கழிவுநீர் இணைப்பு பெறாமல், கழிவுநீரை மழைநீர் வடிகால் வழியாக கொரட்டூர் ஏரியில், வெளிப்படையாகவே கலக்க விடுகின்றன.
இது நீண்ட காலமாக தொடர்கிறது. ஏரி நீர் மாசடைந்ததால், சுற்றுவட்டார பகுதி நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏரி முழுதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. இதனால், மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் அழிந்து வருகின்றன. மலேரியா, டெங்கு பரப்பும் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, 2016ல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
மத்திய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை கலெக்டர், சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம், சென்னை ஐ.ஐ.டி., உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 19 பேர் அடங்கிய வல்லுநர் குழுவை அமைத்து, கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த குழு அமைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகளான நிலையில், தற்போது வரை கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியவில்லை.
முதல்வர் வரை மனு அளித்தும், இந்த விவகாரத்தில் அரசு அலட்சியமாகவே உள்ளது. நீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழு செயல்பாட்டில் உள்ளதா என்கிற சந்தேகம் எழுகிறது என குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள், இனியாவது கவனம் செலுத்தி, ஏரியை அரசு மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.