/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்மிக்தாவின் சலங்கை ஒலிகளால் நிரம்பிய அரங்கமும் உள்ளமும்
/
ஸ்மிக்தாவின் சலங்கை ஒலிகளால் நிரம்பிய அரங்கமும் உள்ளமும்
ஸ்மிக்தாவின் சலங்கை ஒலிகளால் நிரம்பிய அரங்கமும் உள்ளமும்
ஸ்மிக்தாவின் சலங்கை ஒலிகளால் நிரம்பிய அரங்கமும் உள்ளமும்
ADDED : டிச 24, 2024 12:44 AM

பெரியசாமி துாரன் இயற்றிய சுத்தசாவேரி ராகத்தில் அமைந்த, 'தாயே திரிபுரசுந்தரி' பாடலுடன், நாரத கான சபாவில் நடந்த இசை விழாவில், தன் நடன நிகழ்ச்சியை துவக்கினார் ஸ்மிக்தா மேனன்.
தொடர்ந்து, நிகழ்ச்சியின் முக்கிய உருப்படியான பதவர்ணம், பாரதியாரின் வரிகளை கொண்டதாக மேடையேறியது. அழகிய நடையுடன் ஆரம்பித்து, வர்ணத்தின் ஒவ்வொரு ஆதி அமைப்புகளுக்கும் ஏற்றவாறு, கால்களை சமநிலை செய்தும், சரிந்தும், பறந்து விரிந்தும், நேர்த்தியாக தன் அடவுகளை கையாண்டார்.
தன் நாயகனிடம் தன் எண்ணத்தையும் மன நிலையையும் எடுத்துக்கூறுமாறு அது அமைந்திருந்தது. கடிதம் எழுதி, தன் எண்ணத்தை வெளிப்படுத்த நினைப்பதும், என்ன தவறு செய்தேனோ என புலம்புவதுமாக சஞ்சாரி அமைந்திருந்தது.
சரண ஸ்வரக் கோர்வைகளுக்கான அடவுகள், சாஹித்யத்தின் கதையை கூறும் வகையில் அமைந்திருந்தது. சோகத்தையும் அவரின் மேல் இருக்கும் அன்பையும் கூறடி தங்கமே தங்கம் என, நாயகனின் வருகை வேண்டிய தவிப்பை, ஸ்மிக்தாவின் பாவனைகள் அரங்கெல்லாம் பரப்பின.
தொடர்ந்து, துகாவந்தி ராகத்தில், மிஸ்ரசாபு தாளத்தில் அமைந்த அஷ்டபதி ஆரம்பித்தது. அதில், 'ராதையிடம் தன் மனதை பறிகொடுக்கிறான் கண்ணன். மனம் இறங்கி வாராயோ' என, மண்றாடுகிறான்.
நாயகியை வர்ணித்து, அவளுக்காக மலர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மலர் பரப்பை காட்டி, ராதையின் பதற்றம் தணிக்கிறான். அவளது கையை தன் மார்பினில் வைத்து, இதய துடிப்பை உணரச் செய்கிறான்.
தொடர்ந்து, அடையார் ஸ்ரீ சாய் அவர்களால் எழுதப்பட்ட மீனாட்சி பிள்ளைத்தமிழ் ஆரம்பமாகிறது. உறங்காமல் விளையாடும் தன் பிள்ளையான மீனாட்சியை, சீராட்டி கொஞ்சி ஆசுவாசப்படுத்துகிறாள் தாய்.
தாமரை பாதத்தில் முத்தமிட்டு, கிளியை கொண்டு விளையாட்டு காட்டி, துாய தங்க ஆபரணங்களை அணிந்த மீனாட்சியை, தொட்டிலில் உறங்க செய்து நிம்மதி அடைகிறாள்.
கண்ணனாக, ராதையாக, தாயாக, குழந்தையாக என, சின்ன சின்ன சிருங்காரங்களால், அரங்கத்தில் உள்ளோரை கட்டிப்போட்டார் ஸ்மிக்தா. லால்குடி ஜெயராமன் இயற்றிய தில்லானாவோடு நிகழ்வு நிறைவடைந்தது.
டாக்டர் குருபரத்வாஜ் மிருதங்கம் வாசிக்க, அதை தன் சலங்கை ஒலிகளால் நிரப்பிய ஸ்மிக்தாவின் சுத்த நிருத்த கோர்வையும், இந்த தில்லானாவில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
தன் ஆசிரியரான காயத்ரி சுப்ரமணியமுக்கும், இன்றைய நடன நிகழ்ச்சியை வழங்க உறுதுணையாக இருந்த பக்கவாத்திய கலைஞர்களுக்கும் நன்றி கூறி, நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.