/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குத்தகை ரத்து விவகாரம் அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
/
குத்தகை ரத்து விவகாரம் அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
ADDED : செப் 23, 2024 11:56 PM
கிண்டியில், ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு 160.68 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு அரசு வழங்கி இருந்தது.
இந்த நிலையில், ரேஸ் கிளப் வாடகை பாக்கி 730.86 கோடி ரூபாய் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வாடகை பாக்கியை செலுத்த வேண்டும். இல்லையென்றால், அங்கிருந்து அகற்றவும் உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து, 'ரேஸ் கிளப்' சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ரேஸ் கிளப்பிற்கு வழங்கிய குத்தகையை ரத்து செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்தது.
இம்மனு, நீதிபதி டீக்காராமன் முன், விசாரணைக்கு வந்த போது, 'ரேஸ் கிளப்புக்கு வழங்கிய நிலம் யார் வசம் உள்ளது என, அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ரேஸ் கிளப் சார்பில், மூத்த வழக்கறிஞர் சோமயாஜி, ''எங்கள் வசம் தான் நிலம் உள்ளது. மேல்முறையீட்டு வழக்கில், இரு தரப்பிலும் தற்போதைய நிலை தொடர உத்தரவிடப்பட்டிருந்தது. எனவே, அரசு வசம் நிலம் எடுக்கப்பட்டு விட்டதாக கூறுவது தவறு,'' என்றார்.
வருவாய் துறை சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, 'கடந்த 6ம் தேதி குத்தகை ரத்து செய்யப்பட்டு, 9ம் தேதி அரசு வசம் நிலம் எடுக்கப்பட்டு விட்டது. ஒப்பந்தத்தை மீறும் போது, அரசு எடுப்பதற்கு உரிமை உள்ளது. ரேஸ் கிளப் வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டியதில்லை' என்றனர்.
அப்போது நீதிபதி டீக்காராமன், ''அரசு வசம் நிலம் எடுக்கப்பட்டு விட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. வருவாய் நிலை உத்தரவின்படி தான், நிலம் எடுக்கப்பட்டதா; அதற்கான ஆவணம் உள்ளதா,'' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு, மூத்த வழக்கறிஞர் வில்சன், ''தாசில்தார் நடவடிக்கை குறித்து, கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது,'' என பதில் அளித்தார்.
இவ்வழக்கு விசாரணை, இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

