/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பக்கவாத்திய பங்களிப்பில் பட்டைய கிளப்பிய மல்லாடி சகோதரர்கள்
/
பக்கவாத்திய பங்களிப்பில் பட்டைய கிளப்பிய மல்லாடி சகோதரர்கள்
பக்கவாத்திய பங்களிப்பில் பட்டைய கிளப்பிய மல்லாடி சகோதரர்கள்
பக்கவாத்திய பங்களிப்பில் பட்டைய கிளப்பிய மல்லாடி சகோதரர்கள்
ADDED : டிச 21, 2024 12:13 AM

நாராயண தீர்த்தரின் 'ஜெய ஜெய ரமா நாத' கீர்த்தனையை, நாட்டை ராகம், கண்ட சாபு தாளத்தில்அமைத்து, தீர்த்தரின் தீர்க்கமான வரிகளை தித்திக்கும் குரலில் பாடி, கச்சேரியை இனிதே ஆரம்பித்தனர், இசை உலகில் பிரபல வாய்ப்பாட்டு கலைஞர்கள், மல்லாடி சகோதரர்கள் எனும் ஸ்ரீராம் பிரசாத் -ரவிகுமார்.
அடுத்து, தியாகராஜரின் 'அபராதமுல நோர்வ' கீர்த்தனையை, ரசாளி ராகம், ஆதி தாளத்தில் அமைத்து, அரங்கில் இருந்தவர்களை தன் நீண்ட கால இசை அனுபவத்தின் உலகிற்குள் நுழைய வைத்தனர்.
தொடர்ந்து, நீலகண்ட சிவனின் 'சிவனை சாம்பசதா சிவனை' எனும் கீர்த்தனை. இதை, ஹமீர் கல்யாணி ராகத்தில், ஆதி தாளத்தில் பாடி, அனைவரையும் அசரவைத்தனர்.
முக்கிய உருப்படியாக,'ஊரகே கல்குண' எனும் தியாகராஜரின் கீர்த்தனையை, சஹானா ராகம், மிஸ்ரா சாபுவில் பாடிய விதமும், அதற்கேற்ப பக்கவாத்தியங்களின் பக்குவமான பங்களிப்பும் அடடா!
இசை பசியில் ஊறியோருக்கு 'தடபுடல்' விருந்து கிடைத்ததுபோல் இருந்தது.இந்த ஆனந்தம் அடங்குவதற்குள், ஆரம்பம் ஆனது, ராகம் தானம் பல்லவி பகுதி.
கல்யாணி ராகம், கண்டா திரிபுதா தாளத்தில் அமைத்து, ஆலாபனைகளுக்கு அரங்கம் அசைந்தது.
தனி ஆவர்த்தனத்தில், வயலின் ராமகிருஷ்ணன், மிருதங்கம் திருவனந்தபுரம் பாலாஜி, கடம் கிரிதர் உடுபா ஆகியோர், தங்கள் வித்தைகளை வெளிக்கொணர்ந்தனர்.
இறுதியாக, முத்துசாமி தீட்சிதரின் 'நந்த கோபால முகுந்த கோகுல' கீர்த்தனையை, யமுனா கல்யாணி ராகம் ஆதி தாளத்தில் பாடி நிரவல் செய்யும்போது, கலைஞர்களின் கைவண்ணமும், குரல் வளமும் மெய்ப்பட, தி.நகர் கிருஷ்ண கான சபாவில் ரசிகர்களின் பூரிப்பில் அறிய முடிந்தது.
- நமது நிருபர் -