/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கை, 1,000 ஆனது
/
சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கை, 1,000 ஆனது
ADDED : அக் 05, 2024 05:40 AM

சென்னை,: தமிழகத்தில், சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கை, 700ல் இருந்து ஆயிரமாக அதிகரித்துள்ளதாக, வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சென்னை கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா வளாகத்தில், வன உயிரின வார விழாவை, அமைச்சர் பொன்முடி நேற்று துவக்கி வைத்தார். வன உரியின பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின், அவர் பேசியதாவது:
தமிழகத்தில் பசுமை பரப்பளவை, 33 சதவீதமாக உயர்த்த, மரம் நடும் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.
காடுகளிலும், அதற்கு வெளியிலும் கிடைக்கும் காலி இடங்களில், மரங்கள் நடுவதில் உயர் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது யானைகளின் எண்ணிக்கை, 3,609 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோன்று, அரிய வகை உயிரினமான சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கையும், 700ல் இருந்து, ஆயிரமாக அதிகரித்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. வனத்துறையினர் எடுத்து வரும் நடவடிக்கைகளே, இதற்கு அடிப்படை காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் செந்தில்குமார், வனத்துறை தலைவர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி, சென்னை வன உயிரின பாதுகாவலர் மணிஷ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கியத்துவம் என்ன?
உடல் அமைப்பு, வாழிடம் போன்ற பல்வேறு காரணங்களால், சாம்பல் நிற அணில்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பிட்ட சில மாவட்டங்களில், இதன் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால், புதிய சரணாலயம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் சாம்பல் நிற அணில்களுக்கான சரணாலயம் ஏற்படுத்தப்பட்டது. இது, 480 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 700 அணில்கள் மட்டுமே இருப்பது தெரிந்தது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இதன் எண்ணிக்கை, ஆயிரத்தை தாண்டியுள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.