sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநகராட்சி, நீதித்துறைக்கு ஒரே இடம் ஒதுக்கீடு தாராள மனசு வருவாய்த்துறையால் மல்லுக்கட்டும் அதிகாரிகள்

/

மாநகராட்சி, நீதித்துறைக்கு ஒரே இடம் ஒதுக்கீடு தாராள மனசு வருவாய்த்துறையால் மல்லுக்கட்டும் அதிகாரிகள்

மாநகராட்சி, நீதித்துறைக்கு ஒரே இடம் ஒதுக்கீடு தாராள மனசு வருவாய்த்துறையால் மல்லுக்கட்டும் அதிகாரிகள்

மாநகராட்சி, நீதித்துறைக்கு ஒரே இடம் ஒதுக்கீடு தாராள மனசு வருவாய்த்துறையால் மல்லுக்கட்டும் அதிகாரிகள்


ADDED : அக் 30, 2025 11:43 PM

Google News

ADDED : அக் 30, 2025 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில், ஒரே சர்வே எண் கொண்ட இடத்தை, கடந்த ஜூலை 7ம் தேதி, ஒருங்கிணைந்த விளையாட்டு திடல் அமைக்கும் பணிக்காக, சென்னை மாநகராட்சிக்கு ஒதுக்கிய வருவாய்த்துறை அதிகாரிகள், 20 நாட்களில், அதே இடத்தை நீதிமன்ற வளாகம் கட்ட நீதித்துறைக்கு ஒதுக்கி, தங்களின் தாராள மனதை காட்டியுள்ளனர். இந்த குளறுபடியால், நான்கு கோடி ரூபாயிலான விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியை மாநகராட்சி முடக்கியுள்ளது. சென்னை சோழிங்கநல்லுார் மண்டலம், 198வது வார்டு, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில், 7 ஏக்கர் அரசு தரிசு இடம் உள்ளது. காலியாக உள்ள இந்த இடத்தை, காரப்பாக்கம் மற்றும் சுற்றி உள்ள இளைஞர்கள், 25 ஆண்டுக்கு மேலாக விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அருகில் பள்ளி உள்ளதால், அப்போதைய ஊராட்சி நிர்வாகம் சார்பில், 2010ம் ஆண்டு ஒரு பக்கம் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. மாநகராட்சியுடன் இணைந்தபின், 2023ல், 1.10 கோடி ரூபாயில், மைதானம் முழுதும் சுற்றுச்சுவர் மற்றும் அலங்கார வளைவு கட்டப்பட்டது.

இந்நிலையில், கபடி, கால்பந்து, கைபந்து, கிரிக்கெட், ஓடுபாதை, நீச்சல் குளம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் கட்ட, 4 கோடி ரூபாய் ஒதுக்கி, மாநகராட்சி பணிகளை துவக்க திட்டமிட்டது.

இதற்காக, தனி வட்டாட்சியர், நில அளவையர் இடத்தை அளந்து, '7 ஏக்கர் இடம் மாநகராட்சி விளையாட்டு திடல் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது' என, தெற்கு வட்டார துணை ஆட்சியர், 2025 ஜூலை 7ல், மாநகராட்சிக்கு கடிதம் வழங்கினார்.

இந்நிலையில், அதே இடத்தில் 5 ஏக்கரை, அதே மாதம் 28ம் தேதி, நீதித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என, வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலர் அரசாணை வெளியிட்டுள்ளார்.

ஒரே இடத்தை இரு துறைகளுக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒதுக்கியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குளறுபடியால், 4 கோடி ரூபாயில் நடைபெற இருந்த விளையாட்டு மைதான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

சோழிங்கநல்லுார் நீதிமன்றம் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. சொந்த கட்டடம் கட்ட இடம் வேண்டுமென நீதித்துறையில் இருந்து கோரிக்கை வந்தது.

பல இடங்களை ஆய்வு செய்து, அரசின் தரிசு நிலத்தை, 5 ஏக்கர் வழங்க முடிவு செய்து, ஜூலை மாதம், சோழிங்கநல்லுார் தாசில்தாரிடம் அறிக்கை கேட்டோம்.

அவர், ஏற்கனவே விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கிய, 5 ஏக்கர் இடத்தை அறிக்கையாக வழங்கினார். இதை வைத்து, அரசாணை வெளியிடப்பட்டது.

இது, திட்டமிட்டு நடந்ததா, தவறுதலாக நடந்ததா என, சோழிங்கநல்லுார் தாசில்தாரிடம் விசாரிக்கிறோம். தாங்கள் ஒதுக்கிய இடத்தை நீதித்துறையும், பொதுப்பணித்துறையும் ஆய்வு செய்தது.

ஓ.எம்.ஆரில் இருந்து, 1 கி.மீ., துாரத்தில் குடியிருப்பு பகுதிகள் இருப்பதாகவும், ஒதுக்கப்பட்ட இடத்தை ஒட்டி பகிங்ஹாம் கால்வாய் செல்வதால், நீர்ப்பிடிப்பு பகுதி என, வகைப்பாடு பிரச்னை ஏற்படும் என, இடத்தை ஏற்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.

மேலும், நீதித்துறையை தவறாக வழி நடத்தியதாக, வருவாய்த்துறை மீது பழி விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், 174 சர்வே எண் இடத்தை நீதித்துறைக்கு ஒதுக்குவதில் சிக்கல் உள்ளது.

சோழிங்கநல்லுாரில், 8 ஏக்கர் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அதில், 2 ஏக்கர் இடம், தாலுகா அலுவலகம் கட்ட ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள இடத்தில், 2 ஏக்கரை, நீதிமன்றத்திற்கு ஒதுக்கலாமா என ஆலோசித்து வருகிறோம். வேறு இடம் ஒதுக்குவது குறித்தும் ஆய்வு செய்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, 198வது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் லியோ சுந்தரம் கூறியதாவது: விளையாட்டு மைதானம் அமைக்க, 2009ம் ஆண்டு முதல் படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த 2022ம் ஆண்டு முதல், விளையாட்டு மைதானம் கேட்டு, ஆறு முறை மாநகராட்சியில் கடிதம் வழங்கிய பின், 4 கோடி ரூபாய் ஒதுக்கி பணி துவங்க இருந்தது. வருவாய்த்துறையின் குளறுபடியால், பணியை தொடர முடியவில்லை. உயர் அதிகாரிகள் தலையிட்டு, குளறுபடியை நீக்கி பணியை துவங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


காரப்பாக்கம் பகுதி இளைஞர்கள் கூறியதாவது: ஓ.எம்.ஆரில் பெரிய அளவில் விளையாட்டு மைதானம் இல்லை. ஏழை, நடுத்தர குடும்பத்தில் வசிக்கும் எங்களுக்கு, இந்த இடம் வரப்பிரசாதமாக இருந்தது. நாங்களே காலி இடத்தை சரி செய்து விளையாடி வந்தோம். முறையான கட்டமைப்புடன் பல்வேறு வகையான விளையாட்டுகளுடன் கூடிய மைதானம் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தோம். இப்போது தமிழக அரசு நான்கு கோடி ரூபாய் ஒதுக்கியது. அதையும் பயன்படுத்தவிடாமல் வருவாய்த்துறை தடுக்கிறது. எம்.எல்.ஏ., கவுன்சிலர் தலையிட்டு, குளறுபடிகளை நீக்கி, விளையாட்டு மைதானம் கட்டும் பணியை துவங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us