/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆர்.ஐ., அலுவலகம் திறப்பு போரூர் மக்கள் நிம்மதி
/
ஆர்.ஐ., அலுவலகம் திறப்பு போரூர் மக்கள் நிம்மதி
ADDED : ஜன 30, 2025 12:34 AM
போரூர்: போரூரில், மாநகராட்சி பகுதி அலுவலகம் அருகில், பழமையான அரசு கட்டடத்தில் போரூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வந்தது.
பொதுப்பணித் துறை, நீண்ட காலமாக முறையாக பராமரிக்காததால், இந்த கட்டடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது; கூரை பெயர்ந்தது. மழைக்காலத்தில் வழியும் நீரால் முக்கிய ஆவணங்கள் சேதம் அடைந்தன.
தவிர, போரூர், மதுரவாயல் ஆகிய இரு பகுதிகளும் ஒன்றாக சேர்க்கப்பட்டு, மதுரவாயல் வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டார்.
இதனால், போரூர் பகுதியைச் சேர்ந்தோர், ஜாதி, வருவாய், வாரிசு போன்ற சான்றிதழ்கள் பெற, 10 கி.மீ., தொலையில், வி.ஏ.ஓ., கட்டடத்தில் இயங்கிய மதுரவாயல் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று வர சிரமப்பட்டனர்.
பழைய கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் 2018ம் ஆண்டு முதல், தொடர்ச்சியாக செய்தி வெளியானது.
இதையடுத்து அக்கட்டடம் இடிக்கப்பட்டு, அதே இடத்தில் 29 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அலுவலகத்தில், மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், குத்து விளக்கேற்றி திறந்தனர்.

