ADDED : டிச 12, 2024 11:58 PM

ஆவடி கோவில் பதாகை ஏரி, 570 ஏக்கர் பரப்பளவு உடையது. நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் கனமழையால், கோவில் பதாகை ஏரி நிரம்பி வழிகிறது.
கலங்கள் வழியாக வெளியேறும் வெள்ளம், கணபதி அவென்யூ, கோவில் பதாகை பிரதான சாலையில், வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை எது, பள்ளம் எது என தெரியாமல், கடும் அவதியடைந்தனர்.
கணபதி அவென்யூ வழியாக வெளியேறிய மழை வெள்ளம், மங்களம் நகர் தரைப்பாலம் வழியாக குடியிருப்புக்குள் புகுந்தது. இதனால், மங்களம் நகர், டிரினிட்டி அவென்யு, எம்.சி.பி நகர், கிருஷ்ணா அவென்யூ, கிறிஸ்து காலனி, செக்ரட்டரி காலனியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து மழை பெய்தால், கோவில்பதாகை பிரதான சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், வடிகாலில் வடியாமல், கோவில் பதாகை பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கோவில் பதாகை ஏரியை துார்வாரி, தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.