/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடிகள் மிரட்டலால் அலுவலகம் வராத ஊராட்சி தலைவரால் பணிகள் பாதிப்பு
/
ரவுடிகள் மிரட்டலால் அலுவலகம் வராத ஊராட்சி தலைவரால் பணிகள் பாதிப்பு
ரவுடிகள் மிரட்டலால் அலுவலகம் வராத ஊராட்சி தலைவரால் பணிகள் பாதிப்பு
ரவுடிகள் மிரட்டலால் அலுவலகம் வராத ஊராட்சி தலைவரால் பணிகள் பாதிப்பு
ADDED : பிப் 24, 2024 12:08 AM
கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனுார் ஊராட்சியில் ஒன்பது வார்டுகள் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டதிற்கு உள்பட்ட இந்த ஊராட்சியில் எட்டு வார்டுகளில் தி.மு.க.வினர், ஒரு வார்டில் அ.தி.மு.க., கவுன்சிலர் தேர்வாகினர்.
ஊராட்சியின் தலைவராக தமிழ் அமுதன் என்பவரும், துணை தலைவராக செல்வி என்பவரும் உள்ளனர். இருவரும் , தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள்.
தமிழ் அமுதனுக்கு, சில மாதங்களுக்கு முன்பு ரவுடிகளிடம் ஏற்பட்ட மோதலால் தொலைபேசி வாயிலாக மிரட்டல் வந்தது. இது தொடர்பாக அவர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். மிரட்டல் வந்ததிலிருந்து சில மாதங்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என்றும், ஆதனுார் ஊராட்சியில் வரியினங்கள் வசூலிப்பு, குப்பை சேகரிப்பு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் முறையாக நடக்காததால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:
ஊராட்சி தலைவர் தமிழ் அமுதன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அவரின் பதவியை பறித்து காஞ்சிபரம் கலெக்டர் நடவடிக்கை எடுத்தார். ஆனால், அமைச்சர் அன்பரசன் தலையீட்டால், கலெக்டரின் நடவடிக்கை திரும்ப பெறப்பட்டது.
அதன்பிறகும் ஊராட்சி பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. குப்பை பிரச்னை, கொசு மருந்து அடிக்காதது உள்ளிட்ட பணிகள் மொத்தமாக முடங்கியுள்ளன. சுடுகாட்டில் இறந்தோரை அடக்கம் செய்ய வருவோருக்கு தண்ணீர் வசதி இல்லை. வீட்டு வரி செலுத்த சென்றால், அலுவலகத்தில் யாரும் இருப்பதில்லை. புதிதாக வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதி பெற முடியாமல் தவித்து வருகிறோம்.
சுகாதார பணிக்காக, ஆதனுாரில் நான்கு டிராக்டர்கள் இருந்தன. தற்போது, ஒரு டிராக்டர் மட்டுமே உள்ளது. அதுவும் பழுதாகி உள்ளது. குப்பை சேகரிக்க பயன்பட்ட ஏழு வண்டிகளில் ஐந்து சேதமடைந்துள்ளன. இரு வண்டிகளை வைத்துக்கொண்டு, துாய்மை பணியாளர்களால் குப்பை சேகரிப்பு பணி மேற்கொள்ள முடியவில்லை.
தலைவரை, ஊராட்சி அலுவலகத்தில் பார்க்க முடிவதில்லை. வீட்டில் பார்க்க முயற்சித்தால், எங்களை அனுமதிப்பதில்லை. துணைத்தலைவர் செல்வி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதால், அவரையும் சந்திக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக அவரது கணவர் தான் ஊராட்சி அலுவலகம் வருகிறார்.
எங்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் பிரச்னைகள், தெருவிளக்கு, சாலை வசதிகள் எதுவும் நடக்காததால், மிகவும் அதிருப்தி அடைந்துள்ளோம். ஆதனுார் ஊராட்சி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. ஒவ்வொரு முறையும் கலெக்டரை சந்தித்து புகார் தெரிவிக்க, இங்கிருந்து 50 கி.மீ., துாரம் செல்ல வேண்டும். அதனால், மாவட்ட நிர்வாகமே உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் பகுதியில் தடையின்றி வளர்ச்சி பணிகள் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, ஊராட்சி தரப்பினரிடம் கேட்டபோது, 'தலைவர் தமிழ் அமுதன் உயிருக்கு, ரவுடிகளிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. அதனால் அவர், யாரையும் சந்திக்காமல் வீட்டிலே இருக்கிறார்' என்றனர்.
மணிமங்கலம் போலீசார் கூறுகையில், 'ஆதனார் ஊராட்சி தலைவர் தமிழ் அமுதனுக்கு, ரவுடிகளிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து, அவரது புகாரின்படி, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது' என்றனர்.
இது குறித்து கேட்க முயன்றபோது, ஊராட்சி தலைவர் தமிழ் அமுதனை தொடர்பு கொள்ள முடியவில்லை.