/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரதான வழித்தட பஸ்கள் நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடும் பட்டாபிராம் பஸ் நிலையம் புனரமைத்தும் வீணாகும் அவலம்
/
பிரதான வழித்தட பஸ்கள் நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடும் பட்டாபிராம் பஸ் நிலையம் புனரமைத்தும் வீணாகும் அவலம்
பிரதான வழித்தட பஸ்கள் நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடும் பட்டாபிராம் பஸ் நிலையம் புனரமைத்தும் வீணாகும் அவலம்
பிரதான வழித்தட பஸ்கள் நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடும் பட்டாபிராம் பஸ் நிலையம் புனரமைத்தும் வீணாகும் அவலம்
ADDED : ஜன 13, 2025 01:49 AM

ஆவடி:ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம் பகுதியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் வரை, பட்டாபிராமில் இருந்து சென்னைக்கு நேரடி பேருந்து வசதி இல்லை.
பயணியர் 7 கி.மீ., துாரம் பயணித்து, ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சென்று வந்தனர்.
பட்டாபிராமில், பேருந்து நிலையம் அமைத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு நேரடி பேருந்து சேவை துவங்க வேண்டும் என பயணியர் கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, அப்போதைய ஸ்ரீபெரும்புதுார் எம்.பி., கிருஷ்ணசாமியிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இதையடுத்து, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பழைய எஸ்.எஸ்.எல்., நிறுவனத்தின் ஒரு பகுதி இடத்தை கையகப்படுத்தி, பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த 2002 - -2003ம் ஆண்டு, எம்.பி., பொது நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் பட்டாபிராம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து, பட்டாபிராம் பேருந்து நிலையத்தில் இருந்து, கிண்டி தொழிற்பேட்டை, கவியரசு கண்ணதாசன் நகர், பெரும்புதுார், பொன்னேரி, அம்பத்துார் எஸ்டேட், திருவல்லிக்கேணி, வேளச்சேரி உள்ளிட்ட பிரதான பகுதிகளுக்கு, நேரடி பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், கடந்த 2018 முதல் பட்டாபிராம் ரயில்வே மேம்பால பணி நடந்து வருவதால், அதற்கான கட்டுமான பொருட்கள் பேருந்து நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் ஒரு வழிப்பாதை பணிகள் முடிந்த நிலையில், பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்டு, மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.
ஆனால், கிண்டி, பூந்தமல்லி, அண்ணா சதுக்கம் தவிர ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த அனைத்து வழித்தடங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், பட்டாபிராம் பேருந்து நிலையம் திறந்தும், பயனற்று உள்ளது. வழக்கம் போல் பொதுமக்கள் ஆவடிக்கு செல்லும் நிலை தான் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பட்டாபிராம், திருநின்றவூர், முத்தாபுதுப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள், மாதாந்திர பயணச்சீட்டு, மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயணச்சீட்டு மற்றும் மாணவர்களுக்கான பயணச்சீட்டு உள்ளிட்டவை பெறுவதற்கு, ஆவடி பேருந்து நிலையம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேற்கூறிய பகுதிகளில் மட்டும் 30,000க்கும் மேற்பட்ட மூத்த குடிமகன்கள் உள்ளனர். இதன் காரணமாக ஏற்படும் நேர விரயத்தால், முதியோர் மற்றும் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள், பட்டாபிராமில் இருந்து இயக்கப்பட்டு வந்த அனைத்து வழித்தடங்களை மீண்டும் இயக்க வேண்டும். பட்டாபிராம் பேருந்து நிலையத்தில், மேற்கூறிய அனைத்து பயணச்சீட்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
பட்டாபிராம் பேருந்து நிலையத்தில் இருந்து நிறுத்தப்பட்ட பேருந்துகள் விபரம்:
எண் வழித்தடம்
எப்70 கிண்டி
121இ கவியரசு கண்ணதாசன் நகர்
565 ஸ்ரீபெரும்பதுார்
536 பொன்னேரி
65பி அம்பத்துார் எஸ்டேட்
டி70 வேளச்சேரி
27எச் அண்ணா சதுக்கம்
பி70 கிண்டி
தற்போது இயக்கப்படும் பேருந்துகள் விபரம்:
40எச் அண்ணா சதுக்கம்
எப்70 கிண்டி
54சி பூந்தமல்லி