/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணை மிரட்டி பணம் பறித்து பலாத்காரம் செய்த போலீஸ் கைது
/
பெண்ணை மிரட்டி பணம் பறித்து பலாத்காரம் செய்த போலீஸ் கைது
பெண்ணை மிரட்டி பணம் பறித்து பலாத்காரம் செய்த போலீஸ் கைது
பெண்ணை மிரட்டி பணம் பறித்து பலாத்காரம் செய்த போலீஸ் கைது
ADDED : அக் 26, 2024 02:35 AM
சென்னை,:பெண்ணை மிரட்டி பணம் பறித்தது மட்டுமின்றி, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிய ஆயுதப்படை போலீஸ்காரரை, விருகம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த, 32 வயது பெண், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு மசாஜ் சென்டர்களில், 'மசாஜ் தெரபிஸ்ட்' பணிபுரிந்து வருகிறார்.
இவர், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த 23ம் தேதி புகார் ஒன்றை அளித்தார்.
புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 17ம் தேதி இரவு, 10:00 மணியளவில், காக்கி பேன்ட், நீல நிற டி-ஷர்ட், முகக்கவசம் அணிந்திருந்த மர்ம நபர், எங்கள் வீட்டிற்குள் வந்தார்.
யாரென கேட்ட போது, தன்னை போலீஸ் எனக் கூறினார். மேலும், நான் விபச்சாரம் செய்து வருவதாகவும், அதனால் பிடிக்க வந்திருப்பதாகவும் கூறினார். 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவதாக கூறினார்.
பின், என்னிடம் இருந்த, 50,000 ரூபாயை கொடுத்தேன். மேலும் பணம் வேண்டும் எனக் கேட்டதால், வேறு வழியின்றி என் கணவரிடம் ஏ.டி.எம்., கார்டு கொடுத்து, பணம் எடுத்து வர அனுப்பினேன்.
என் கணவர் வெளியே சென்ற நேரத்தைப் பயன்படுத்தி, மர்ம நபர் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, படுக்கை அறையில் பாலியல் பலாத்காரம் செய்தார்.
என் கணவர் எடுத்து வந்த, 15,000 ரூபாயை பெற்றுக்கொண்ட மர்ம நபர், தான் மீண்டும் வருவதாகவும், பணம் தர வேண்டும் எனவும் மிரட்டிச் சென்றார்.
அவர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, புகாரில் கூறப்பட்டிருந்தது.
புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் அந்த நபர், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாபுஷா, 28, என்பதும், சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது.
மேலும், தற்போது இவர், சஸ்பெண்டில் இருப்பதும் விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து நேற்று அவரை, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.