/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'இந்த சமூகத்தின் வேர்கள் அன்பு செலுத்துவோர் தான்'
/
'இந்த சமூகத்தின் வேர்கள் அன்பு செலுத்துவோர் தான்'
ADDED : ஜன 18, 2024 12:32 AM

சென்னை நந்தனத்தில் நடந்து வரும் 47வது புத்தகக் காட்சியில், 'அன்பெனும் ஆயுதம்' எனும் தலைப்பில், சியாமளா ரமேஷ்பாபு பேசியதாவது:
வாழ்க்கையை ரசித்து வாழ அன்பு வேண்டும். அதற்கு முதலில் செய்ய வேண்டியது, நம் மீது நாமே அன்பு காட்டுவதுதான்.
நீங்கள் சோர்வுறும்போதெல்லாம், உங்களை நீங்களே நேசியுங்கள்; ஆதரவு சொல்லுங்கள்; அன்பை உங்களிடமிருந்து துவக்குங்கள். நம் மீது அன்பு இல்லாததாலேயே, சக மனிதன் மீது கோபம் வருகிறது.
இன்றைய அன்பு போலியாகவும், பொழுது போக்காகவும் உள்ளது. ஒருவர் மீது அன்பு காட்டி, நட்பாக இருந்தால், வாழ்க்கையில் பல வசதிகள் கிடைக்கும் என கணக்கு போட்டு, அன்பு காட்டுகிறோம்.
மனிதர்களிடம் மட்டுமல்ல, பிற உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதை மனுநீதி சோழன் வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது.
சுற்றுச்சூழல் மீதும், சமூகத்தின் மீதும் அன்பு காட்டவேண்டும். இதனால் காற்று மாசு படாது. ஆற்று நீரிலும், ஏரி நீரிலும் கழிவுநீர் கலக்காது. பொதுக் கழிப்பறைகள் சுத்தமாக இருக்கும்.
மனம் முழுக்க அன்பு வைத்திருக்கும் நபருக்கு கோபமே வராது. ஒரு மனிதன் துடிப்பதைப் பார்த்து பதறுகிற மனிதர்கள் அனைவரும் வள்ளலார் தான். சினிமாவில் ஒரு பாத்திரத்தின் நடிப்பைப் பார்த்து அழத் தெரிந்த நமக்கு, பக்கத்து வீட்டு நபரின் துன்பத்திற்காக அழுகை வருவதில்லை. அன்பு அனைத்தையும் செய்யும். அன்பினால் யாரையும் மாற்ற முடியும். அன்பு செலுத்துவோர், இந்தச் சமூகத்திற்கு வேர் போன்றவர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.