/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபாதை விவகாரம் மாநகராட்சிக்கு கெடு
/
நடைபாதை விவகாரம் மாநகராட்சிக்கு கெடு
ADDED : டிச 03, 2025 05:42 AM
சென்னை: மண்ணடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக, மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிராட்வே பகுதியைச் சேர்ந்த அரசு என்பவர் தாக்கல் செய்த மனு:
மண்ணடி தெருவில் நடைபாதை, பொது பாதை, சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, உணவகங்கள், கடைகள் செயல்பட்டு வருகின்றன. இது, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இவற்றை அகற்ற உத்தரவிடக்கோரி, கடந்த 2020ல் பொது நல வழக்கு தாக்கல் செய்தேன். அப்போது, 'அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு விட்டது' என, மாநகராட்சி தெரிவித்தது. ஆனாலும், ஆக்கிரமிப்புகள் இன்னும் நீடிக்கிறது.
எனவே, மாநகராட்சியின் 5வது மண்டல செயற்பொறியாளர், மண்ணடி தெருவில் உள்ள நடைபாதை மற்றும் பொது சாலை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகள், உணவகங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய, மாநகராட்சிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

