/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண்ணின் நீர் உறியும் தன்மை குறைவு கனமழை பெய்தால் சென்னைக்கு ஆபத்து
/
மண்ணின் நீர் உறியும் தன்மை குறைவு கனமழை பெய்தால் சென்னைக்கு ஆபத்து
மண்ணின் நீர் உறியும் தன்மை குறைவு கனமழை பெய்தால் சென்னைக்கு ஆபத்து
மண்ணின் நீர் உறியும் தன்மை குறைவு கனமழை பெய்தால் சென்னைக்கு ஆபத்து
ADDED : அக் 24, 2025 02:05 AM
சென்னை: 'ஜூலை முதல் பரவலாக பெய்துவரும் மழையால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், நீரை உறிஞ்சும் தன்மை மண்ணில் குறைந்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கினால், சென்னை தாங்காது' என, நீரியல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில், இந்த மழை பெய்தது.
இதனால், அங்குள்ள அணைகள், ஏரிகள் நிரம்பின. அண்டை மாநிலங்களில் பெய்த மழையால், அதை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களுக்கும் அதிக நீர்வரத்து கிடைத்தது.
எச்சரிக்கை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஜூலை மாதம் முதல், இரவு நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மை குறைந்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காலம் துவங்கியுள்ளது. டிசம்பர் மாதம் வரை பருவமழை நீடிக்கும். நடப்பாண்டு சில மாவட்டங்களில் மழை அதிகளவில் பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில், 5,000 கோடி ரூபாய் செலவில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில் பெரிய கால்வாய்களுடன், சிறிய கால்வாய்களை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
பழைய கால்வாய்களை அகற்றி, புதிய கால்வாய் அமைக்கும் பணிக்கு ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.
இணைப்பு இல்லாத இடங்களில், கால்வாய்களில் உள்ள நீரை, பம்பிங் செய்து மற்ற கால்வாய்க்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, நகரின் பல்வேறு இடங்களில், விவசாய பம்ப் மோட்டார்கள், ஜெனரேட்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
அடையாறு, கூவம் ஆறுகள், பகிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலையாறு ஆகியவை கடலில் கலக்கும் முகத்துவாரத்தில், தண்ணீர் சீராக செல்வதற்கு ஏற்ப, அவற்றை உடனுக்குடன் துார்வாருவதற்கு பொக்லைன் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
வெளியேற்றம் மழைநீர் கால்வாய்களை நம்பாமல், இயந்திரங்களை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி, மாநகராட்சி, நீர்வளத்துறை, சென்னை குடிநீர் வாரியம் ஆகியவை பணிகளை மேற்கொண்டு உள்ளன.
ஆனால், ஒரே நேரத்தில் 25 செ.மீ.,க்கு மேல் மழை கொட்டினாலும், இடைவிடாது இரண்டு நாட்கள் மழை பெய்தாலும், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு பெரிய அளவில் ஆபத்து ஏற்படும் என, நீரியல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னையை சேர்ந்த நீரியல் வல்லுனர் ஒருவர் கூறியதாவது:
நடப்பாண்டு ஜூலை முதல் பெய்த மழையால், மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மை குறைந்துள்ளது. இதனால், பெய்யும் மழைநீர் முழுதும் கடல் வழியாக வெளியேற்றப்பட வேண்டும்.
சீரான இடைவெளி இதற்கு மழைநீர் கால்வாய் கட்டமைப்பு முறையாக வேலை செய்ய வேண்டும். ஆனால், மழைநீர் கால்வாய் பணிகள் முடியாததால், முழுக்க முழுக்க இயந்திரங்களை கொண்டு நீர் இறைத்து தள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
நீர்நிலைகள் துார்வாரும் பணிகளும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. சீரான இடைவெளியில் மழை பெய்தால் நிலைமையை சமாளிக்க முடியும்.
புயல் சின்னம் உருவாகி மழை வெளுத்துவாங்கினால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சேதம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
காலநிலை மாற்றம் காரணமாக மழையுடன் வாழ, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்கள் பழகி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

