ADDED : டிச 20, 2024 12:25 AM

கமாஸ் ராகம் 'ப்ரோசே வாரெவருரா' கீர்த்தனையை பாடி, மார்கழி இசை கச்சேரியை அம்சமாக துவக்கினார், வாய்பாட்டு கலைஞர் க்ருதி. இதில் சிட்டை ஸ்வரங்களை விறுவிறுப்பாக பாடியது, அழகூட்டியது.
பின், துரிதமான கால பிரமாணத்தில் 'அட்டுக்காரா' எனும் தியாகராஜர் இயற்றிய மனோரஞ்சனி ராகத்தில் அமைந்த கீர்த்தனையை பாடினார். அவருக்கு பக்கபலமாக, அவரது கணவர் விட்டல் ரங்கன் வயலின் இசைத்தார்.
மிருதங்கம் கணபதிராமன், கஞ்சிரா சுனில்குமார் ஆகிய லய வித்வான்கள், இப்பாடலை எடுத்துச் சென்ற விதம் அருமை. தொடர்ந்து இந்த வரிகளுக்கு கற்பனை ஸ்வரம் இசைத்து, தனிக்கவனம் பெற்றனர்.
தொடர்ந்து, நாட்டை குறிஞ்சி ராகத்தை ரசிக்கும் படியான ஆலாபனை செய்து, தன் குரல்வளத்தால் க்ருதி கைத்தட்டல் பெற்றார். க்ருதியின் குரலுக்கு ஏற்ப, அதே ராகத்தை வயலினில் அழகாக வருடினார் விட்டல்.
இந்த ராகத்தில், சுவாதி திருநாள் மகாராஜா இயற்றிய 'மாமவ சதா' கீர்த்தனையை பாடினார். இதில் சரணத்தில் 'லலித மணி' எனும் வரிகள் நிரவலாக அமைந்தது.
இதே வரிகளுக்கு பொருத்தமான அபிப்பிராயங்களை கொண்டு, கற்பனை ஸ்வரம் இசைத்தது சிறப்பு. 'ஸ்நித நிதம தமக' என, வரிகளுக்கு ஏற்ற வர்ணம் பாடியதும் அழகு.
ரசனையுடன் அமர்ந்திருந்தோருக்கு, மேலும் துடிப்புடன் ரசிக்கும்படியாக, முத்தையா பாகவதரின் பசுபதிப்ரியா ராகத்தில் அமைந்த 'சரவணபவ' கீர்த்தனையை பாடினார். 'மபமதஸ்' என தொடங்கும் சிட்டை ஸ்வரங்கள் பிரமாதமாக இருந்தது.
பின், மிகவும் பிரசித்தி பெற்ற புரந்தரதாசர் பாடலான 'விட்டலா சலகோ' எனும் ஆதி தாளம், தேஷ் ராகத்தில் அமைந்த பாடலை பாடினார். இப்பாடல், மனதிற்கு மயிலிறகை கொண்டு வருடியது போல அமைந்தது.
நிகழ்ச்சியின், வயலின் மேதை பத்மஸ்ரீ லால்குடி ஜெயராமன் இயற்றிய சிந்து பைரவி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'திமித ஜனு ஜனுத தீம்' தில்லானாவை பாடினார். இங்கு சாகித்திய பகுதியில் பயன்படுத்திய சங்கதிகள், தில்லானாவை மேலும் சிறப்புற செய்தது.
மயிலாப்பூர் மதுரத்வனி அரங்கில், கச்சேரியை அழகாக துவங்கி, மனதினுள் நிறைவாக நிறைவு செய்ததே, இக்குழுவின் தனித்துவமாகும்.
- சத்திரமனை ந.சரண்குமார்