/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓட்டுனர் மன்னிப்பு கேட்க பஸ்சை வழிமறித்த பெண்
/
ஓட்டுனர் மன்னிப்பு கேட்க பஸ்சை வழிமறித்த பெண்
ADDED : அக் 20, 2024 12:34 AM

ஒட்டியம்பாக்கம், காரணை- - சைதாப்பேட்டை செல்லும் தடம் எண்: '51பி' அரசு பேருந்து, ஒட்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில், நின்று கொண்டிருந்தது.
நேற்று முன்தினம் இரவு, ஒரு பெண் பயணி ஏற முயன்றபோது, ஓட்டுனர் தேவராஜ் பேருந்தை நகர்த்தியுள்ளார். இதனால், அந்த பெண் பயணிக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஓட்டுனருக்கும், பெண் பயணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பெண் பயணியை, ஓட்டுனர் மரியாதை குறைவாக பேசியுள்ளார்.
பேருந்தில் இருந்த மற்றொரு பெண் பயணி நித்தியபிரயா என்பவர், காயமடைந்த பெண்ணிடம் மரியாதை குறைவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என, ஓட்டுனரிடம் கூறினார். இதற்கு மறுத்த தேவராஜ், நித்தியபிரயாவிடமும் மரியாதை குறைவாக பேசியுள்ளார்.
பேருந்தில் இருந்து இறங்கிய நித்தியபிரியா, பேருந்தின் முன்புறம் நின்று மறியல் செய்தார். அவரை ஓரம் கட்டி, பேருந்தை சைதாப்பேட்டை நோக்கி தேவராஜ் இயக்கினார்.
மற்றொருவர் ஸ்கூட்டரில் பின் தொடர்ந்து வந்த நித்தியபிரியா, அரசன்கழனி பகுதியில் பேருந்தை மீண்டும் வழிமறித்தார்.
பேருந்தின் முன் வாகனத்தை நிறுத்தி, மன்னிப்பு கேட்க வேண்டும் என, பிடிவாதமாக நின்றார். ஓட்டுனரும் அசரவில்லை.
பேருந்து, சாலை நடுவே நின்றிருப்பது குறித்து தகவல் அறிந்து, பெரும்பாக்கம் போலீசார் அங்கு விரைந்தனர். பயணியரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்து, ஓட்டுனரிடம் விசாரிக்க காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
நடுவழியில் நின்ற பேருந்தில் இருந்த பயணியர், வேறு வழியின்றி மாற்று பேருந்தில் புறப்பட்டு சென்றனர்.
ஓட்டுனர், பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட பின், 20 நிமிடங்கள் கழித்து, அவரை போலீசார் விடுவித்தனர். அவர், காலி பேருந்துடன் சைதாப்பேட்டைக்கு புறப்பட்டு சென்றார்.