/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நள்ளிரவு முதல் கன்டெய்னர் லாரிகள் 'ஸ்டிரைக்' - கன்டெய்னர் லாரிகள் வழக்கம்போல் ஓடும்
/
நள்ளிரவு முதல் கன்டெய்னர் லாரிகள் 'ஸ்டிரைக்' - கன்டெய்னர் லாரிகள் வழக்கம்போல் ஓடும்
நள்ளிரவு முதல் கன்டெய்னர் லாரிகள் 'ஸ்டிரைக்' - கன்டெய்னர் லாரிகள் வழக்கம்போல் ஓடும்
நள்ளிரவு முதல் கன்டெய்னர் லாரிகள் 'ஸ்டிரைக்' - கன்டெய்னர் லாரிகள் வழக்கம்போல் ஓடும்
UPDATED : டிச 09, 2025 06:30 AM
ADDED : டிச 09, 2025 06:24 AM

சென்னை: புதிதாக அமல்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று நள்ளிரவு முதல் லாரிகள் இயங்காது என, சங்கங்கள் அறிவித்துள்ளன. இ து தொடர்பாக, ராயபுரத்தில் உள்ள அனைத்து லாரி மற்றும் டிரைலர் உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில், செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.
அப்போது சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
சென்னை முழுதும் கன்டெய்னர் லாரி தொழிலில், 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு, எப்.சி., எனும் பழைய வாகனங்கள் புதுப்பிப்பு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. அதில், கனரக வாகனங்களுக்கான கட்டணம், 850 ரூபாயில் இருந்து 28,000 ரூபாயாக உயர்த்தப்பட்டதை திரும்ப பெற வேண்டும். ஒரு லாரிக்கு ஆண்டிற்கு 15,000 முதல் 20,000 ரூபாய் வரை போக்குவரத்து போலீசாரால் 'ஆன்லைன்' அபராதம் விதிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.
தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும்; குடித்துவிட்டு லாரியை ஓட்டும் ஓட்டுநரை தண்டிக்க வேண்டுமே தவிர, லாரியை நிறுத்தக்கூடாது. மாநகராட்சி, நகராட்சி வரி, அதிக பாரம் ஏற்றுவது என, அனைத்துக்கும் சரக்கின் உரிமையாளர்களே பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதற்கு லாரி உரிமையாளர்கள் பொறுப்பு அல்ல. மேலும், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர வேண்டும்; மோட்டார் தொழிலில் உள்ள குறைகளை சரிசெய்ய, மத்திய, - மாநில அரசு மோட்டார் வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை துறைமுகத்தை சேர்ந்த 13 சங்கங்கள், 75 சங்கங்கள் இணைந்து, இன்று நள்ளிரவு முதல் லாரிகள் இயக்குவதில்லை என, அறிவித்துள்ளோம்.
வேலை நிறுத்தத்தால், அரசுக்கு பல கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். எனவே, முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, ஒன்பது கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். அதுவரை தமிழகம் முழுதும் லாரிகளை இயக்க மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அ றிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தில், ஏழு சங்கங்களின் கூட்டமைப்பான, சென்னை - காட்டுப்பள்ளி துறைமுக கான்ட்ராக்டர் கமிட்டி, பங்கேற்காது என, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னை மற்றும் எண்ணுார் - காட்டுப்பள்ளி துறைமுகங்களில், லாரிகளுக்கான எப்.சி., கட்டண உயர்வை கண்டித்து, கன்டெய்னர் லாரிகள், இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக, சில சங்கங்கள் அறிவித்துள்ளன. அதே சமயம், ஏழு சங்கங்களை உள்ளடக்கிய, சென்னை - காட்டுப்பள்ளி துறைமுக கான்ட்ராக்டர் கமிட்டி, இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காது எனவும், இயக்கப்பட உள்ள லாரிகளுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் பாதுகாப்பு கோரி, நிர்வாகிகள், வடக்கு மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பின், கமிட்டியின் செயலர் எம்.எம்.கோபி அளித்த பேட்டி:
ஏழு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாளை வழக்கம் போல் கன்டெய்னர் லாரிகள் ஓடும். எப்.சி., எனப்படும் வாகன தகுதி சான்றிதழுக்கான கட்டணமாக, 10 ஆண்டுகளுக்குள் உள்ள லாரிகளுக்கு, 1,420 ரூபாய்; 11 - 13 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட லாரிகளுக்கு 2,200 ரூபாய்; 14 - 15 ஆண்டுக்கு, 6,220 ரூபாய்; 16 - 20 ஆண்டுக்கு, 14,220 மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேல், 28,220 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில், எங்களிடம், 10 - 15 சதவீதம் அளவிற்கே, 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள லாரிகள் உள்ளன. இது குறித்து, அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் தெரியாமலே, வேலை நிறுத்தம் அறிவித்து, அதில் பங்கேற்க கட்டாயப்படுத்தப்படுகிறோம். சிலர், சுயநலத்திற்காக வேலை நிறுத்தம் செய்கின்றனர். எனவே, எங்கள் லாரிகள் வழக்கம் போல் ஓடும். எனவே, லாரி, ஓட்டுநர், அதன் உரிமையாளர்களுக்கும் பாதுகாப்பு கோரி, இணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளோம். இது தொடர்பாக, எங்களுக்கு மிரட்டல்களும் வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

