/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முடிச்சூர் பெரிய ஏரி உடைந்தால் குடியிருப்புகளை வெள்ளம் சூழும் தடுக்க கோரி கிராம சபையில் குமுறல்
/
முடிச்சூர் பெரிய ஏரி உடைந்தால் குடியிருப்புகளை வெள்ளம் சூழும் தடுக்க கோரி கிராம சபையில் குமுறல்
முடிச்சூர் பெரிய ஏரி உடைந்தால் குடியிருப்புகளை வெள்ளம் சூழும் தடுக்க கோரி கிராம சபையில் குமுறல்
முடிச்சூர் பெரிய ஏரி உடைந்தால் குடியிருப்புகளை வெள்ளம் சூழும் தடுக்க கோரி கிராம சபையில் குமுறல்
ADDED : மே 02, 2025 12:21 AM
தாம்பரம், உழைப்பாளர் தினமான நேற்று, பொழிச்சலுார் ஊராட்சி கூட்டத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு, சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் தி.மு.க., எம்.எல்.ஏ., கருணாநிதி பங்கேற்றார்.
கூட்டத்தில், சிவசங்கரன் நகரில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதற்கு குடிநீர் வழங்கல் வாரியம், 'நெடுஞ்சாலைத் துறையினர் பள்ளம் தோண்டும்போது, குழாயை உடைத்துவிட்டனர். விரைவில் அதை சரிசெய்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றது. தொடர்ந்து, வீட்டு வரி நிர்ணயம் குறித்து விவரிக்கப்பட்டது.
முடிச்சூர் ஊராட்சியில் நடந்த கிராம சபைக்கு, ஊராட்சி செயலர் வாசுதேவன் தலைமையில், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில், பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், 'முடிச்சூர் பெரிய ஏரியின் கலங்கல் பலவீனமடைந்து உடையும் நிலையில் உள்ளது. ஏரியில் உடைப்பு ஏற்பட்டால், தண்ணீர் வெளியேறி அருகேயுள்ள குடியிருப்புகளை மூழ்கடித்துவிடும். அதனால், கலங்கலை சீரமைக்க நான்கு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
'ஆனால் அதிகாரிகள், கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்' என குற்றம் சாட்டியது. இதற்கு வருவாய் துறையினர் முறையான பதில் கூறவில்லை.
அதேபோல், சீக்கனாங் மற்றும் முடிச்சூர் ஏரியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துவதில்லை. இதுகுறித்து கேட்டால், சி.எம்.டி.ஏ., கவனிக்கிறது என்கின்றனர். அவர்கள் நிதியில் பணி நடந்தாலும், என்ன பணி நடக்கிறது என, ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும், கூட்டத்தில் பகுதிவாசிகள் கேட்டுகொண்டனர்.
கவுல்பஜார் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், மாடு வளர்ப்போர், ஹோட்டல் உணவு கழிவை சாலையிலேயே கொட்டுகின்றனர். இதில் இருந்து வெளியேறும் நாற்றத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல், பொழிச்சலுார் ஊராட்சியில் இருந்து வரும் கழிவுநீர், தனியார் இடத்தில் தேங்குகிறது. அதனால், கழிவுநீர் கலக்கும் பாதையை அடைக்கப்போவதாக நில உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
வேங்கைவாசல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடப்பது குறித்து முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு உள்ளது. அதனால் இம்முறை, அனைவருக்கும் தெரிவிக்கும்படி, பகுதிவாசிகள் கோரிக்கையும் வைத்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம், யாருக்கும் தெரியப்படுத்தாமல் குறைவான ஆட்களை வைத்து கூட்டத்தை நடத்தி முடித்தது.
திரிசூலம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், பட்டா கேட்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

