/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கந்தகோட்டத்தில் தேரோட்டம் கோலாகலம்
/
கந்தகோட்டத்தில் தேரோட்டம் கோலாகலம்
ADDED : பிப் 10, 2025 03:28 AM

பிராட்வே:சென்னை பாரிமுனை, கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலில், பிரம்மோற்சவ திருவிழா, பிப்., 3ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. பிப்., 4ல், சிம்ம வாகனத்திலும், திருத்தேரிலும் முத்துக்குமார சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதை தொடர்ந்து, 5ம் தேதி சூரபத்ம வாகனத்திலும், 6ம் தேதி நாக வாகனத்திலும்; 7ம் தேதி தேவேந்திர மயில் வாகனத்திலும், சுவாமி வீதிஉலா நடந்தது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட 36 அடி பிரமாண்ட தேரில், வண்ண மலர்கள் அலங்காரத்தில், வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார்.
மங்கல வாத்தியங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர் மதியம் நிலையை அடைந்தது.
வரும் 13ம் தேதி, முத்தியால்பேட்டை கச்சாலீஸ்வரர் கோவில் தெப்பத்தில், சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்த, 14ம் தேதி கண்ணாடி பல்லக்கு சேவை, 16ம் தேதி தெய்வயானை திருக்கல்யாணம், 17ம் தேதி, வேடர்பறி உற்சவம், 18ம் தேதி வள்ளி திருக்கல்யாண நிகழ்வும் நடக்க உள்ளது.
பிப்., 21ம் தேதி மகா அபிேஷகமும், அதைதொடர்ந்து, மார்ச் 5ல், மாசி கிருத்திகையை முன்னிட்டு தங்கரதம் உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், உபயதாரர்களும் செய்து வருகின்றனர்.