தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/வாழத்தகுதியற்ற குடியிருப்பில் வசிக்கும் 150 குடும்பத்தினர் ...எந்நேரமும் திக்... திக்!: நீதிமன்றம் எச்சரித்தும் 7 ஆண்டுகளாக வெளியேறாமல் அடம்

வாழத்தகுதியற்ற குடியிருப்பில் வசிக்கும் 150 குடும்பத்தினர் ...எந்நேரமும் திக்... திக்!: நீதிமன்றம் எச்சரித்தும் 7 ஆண்டுகளாக வெளியேறாமல் அடம்

வாழத்தகுதியற்ற குடியிருப்பில் வசிக்கும் 150 குடும்பத்தினர் ...எந்நேரமும் திக்... திக்!: நீதிமன்றம் எச்சரித்தும் 7 ஆண்டுகளாக வெளியேறாமல் அடம்

4


UPDATED : செப் 28, 2026 01:41 AM

ADDED : செப் 27, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 01:41 AM ADDED : செப் 27, 2026 05:42 PM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* * * ஆபத்தை உணராத மக்களால் வாரிய அதிகாரிகள் கலக்கம்

தரமணி: தரமணி, கானகத்தில் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு, எந்நேரமும் இடிந்து விழுந்து உயிர்களை காவு வாங்கும் நிலைமையில் உள்ளது. வாழத்தகுதியற்ற இடம் என இக்குடியிருப்பை சென்னை ஐ.ஐ.டி., மற்றும் மாநகராட்சி கட்டுமான வல்லுநர்கள் சான்று அளித்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் எச்சரித்தும் வெளியேறாமல் அடம்பிடிக்கும் 150 குடும்பத்தினரால், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

தரமணி, கானகம் பகுதியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 1990ம் ஆண்டு, 6.61 ஏக்கர் பரப்பு கொண்ட இடத்தில், 30 பிளாக்குகள் கொண்ட, 480 வீடுகள் கட்டப்பட்டன.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வசித்த ஏழை மக்கள், இங்கு குடியமர்த்தப் பட்டனர். மூன்று அடுக்கு கொண்ட கட்டடத்தில், ஒவ்வொரு வீடும், 210 சதுர அடி பரப்பு மட்டும் தான்.

அப்போது, பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில், 1.48 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்து, வீடுகள் வழங்கப்பட்டன.

கடந்த 2018ம் ஆண்டு, வீடுகள் மிகவும் சேதமடைந்ததால், பலர் வீட்டை காலி செய்தனர். மேலும், 210 சதுர அடி பரப்பு என்பது ஒரு குடும்பம் வசிப்பதற்கு போதுமானதாக இல்லை. சிதிலமடைந்த கட்டடங்களும், எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழுந்து, உயிர்பலி வாங்க துடிக்கும் நிலையில் உள்ள பால்கனி தடுப்புகளும், சுவர்களும் தான், இன்று இந்த குடியிருப்புகளின் அடையாளமாக உள்ளன.



ரூ.80 கோடி ஒதுக்கீடு

சுவர்கள் விரிசலடைந்து, செடிகளும், மரங்களும் வளர்ந்துள்ளன. சேதமடைந்த கழிப்பறை குழாய்களால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குடியிருப்பில் வசிப்போரில், பெரும்பாலானோர், கூலித் தொழிலாளர்கள்.

அவர்களால், அன்றாட வீட்டு தேவைகளுக்கு சம்பாதிப்பதே, பெரும் போராட்டம் தான். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரை அடுத்து, 2019ம் ஆண்டு, சென்னை ஐ.ஐ.டி., மற்றும் மாநகராட்சி கட்டுமான வல்லுநர்கள், குடியிருப்பை ஆய்வு செய்தனர்.

அனைத்து வீடுகளும் சேதமடைந்த இருந்ததால், வாழத்தகுதியற்ற குடியிருப்பு என, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சான்று அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கட்டடத்தை இடித்து, அதே இடத்தில் புதிய குடியிருப்பு கட்ட அ.தி.மு.க., ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 2020ம் ஆண்டு ஜூன் மாதம், 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

புதிய குடியிருப்பில், 400 சதுர அடி பரப்பு வீதம், 600 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 330 பேர் வீட்டை காலி செய்து, புதிய வீட்டிற்கான ஆவணங்களை வாரியத்திடம் ஒப்படைத்தனர்.

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பணிகள் தொடங்க இருந்த நிலையில், அங்குள்ள சிலர் வீட்டுவசதி வாரியம்போல், பூமியுடன் சேர்த்து, குறைந்த வருவாய் பிரிவினருக்கு, எல்.ஐ.ஜி., பிரிவின்கீழ் வீடு கட்டி தர வேண்டும் என, உயர் நீதிமன்றத்தை நாடினர்.

இதனால், புதிய குடியிருப்பு கட்ட முடியாத நிலையில், தி.மு.க., ஆட்சியில், 80 கோடி ரூபாய் வேறு திட்டத்திற்கு மாற்றப்பட்டது. வாழத்தகுதியற்ற குடியிருப்பு என, சான்று வழங்கி ஏழு ஆண்டுகள் ஆகியும், 150 குடும்பங்கள் அதே குடியிருப்பில் வசிக்கின்றனர்.

இதில், நீதிமன்றத்தை நாடிய பலர், வெளியே வாடகைக்கு குடியேறிவிட்டு, ஆபத்தான வீட்டை பிறருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர்.

பழிவிழும் அச்சம்

தற்போது, ஒவ்வொரு பிளாக்கும் சிமென்ட் பூச்சு, கூரை பெயர்ந்து உள்ளது. குடிநீர், கழிவுநீர் குழாய்கள் வழியாக நீர் கசிகிறது. கட்டடம் ஈரப்பதமாக உள்ளதால், மழையின்போது மேலும் வலுவிழந்து, இடியும் அபாயம் உள்ளது.

கட்டடத்தின் ஆபத்தை உணர்ந்த உயர் நீதிமன்றம், குடியிருப்பவர்கள் வெளியேற வேண்டும். அதையும் மீறி குடியேறி, பேரிடர் சார்ந்த அசம்பாவிதம் நடந்தால் குடியிருப்பவர்கள் தான் பொறுப்பு என, மூன்று ஆண்டுகளுக்கு முன் கூறியது.

இருந்தும், ஆபத்தை உணராமல் வசிப்பதால், அசம்பாவிதம் நடந்தால் எங்கள் மீது பழிவிழுவதுடன், நடவடிக்கையும் பாயும் என்ற அச்சத்தில், வாரிய அதிகாரிகள் உள்ளனர். இந்த பிரச்னைக்கு அரசு தீர்வு காண்பவது அவசிய தேவை.

யார் பலிகடா?

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது கானகம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருந்தோரில் பலர், பாதுகாப்பாக வெளியேறிவிட்டு, குடியிருப்பு குறித்து ஒன்றும் அறியாத மக்களுக்கு வாடகை விட்டது சட்டவிரோதம். அவர்களுக்கு எதாவது நடந்தால், வாடகைக்கு விட்டவர்கள் பொறுப்பு ஏற்பரா; வழக்கு முடியும் வரை, வீடுகளை காலி செய்து வைப்பது தானே நியாயம். அப்பாவி மக்களை பலிகடா ஆக்குவது எந்தவிதத்தில் நியாயம். பருவமழை நெருங்குவதால், துறை அமைச்சர், உயர் அதிகாரிகள், காவல் துறை தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். - சமூக ஆர்வலர்கள்


சி.எம்.டி.ஏ., ஒதுக்கிய

ரூ.114 கோடி இருக்குது



நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: வீட்டை அனுபவிக்கதான், வாரியம் அதிகாரம் வழங்கி உள்ளது. தரையுடன் சேர்த்து வீடு வழங்குவதில்லை. அப்படி வழங்கினால், இனிவரும் காலங்களில் ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுக்க முடியாது. ஏற்கனவே அரசு ஒதுக்கிய, 80 கோடி ரூபாய் வேறு பணிக்கு சென்றுவிட்டாலும், 2023ல் சி.எம்.டி.ஏ., ஒதுக்கிய, 114 கோடி ரூபாய் கையிருப்பில் உள்ளது. நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு பின்தான், குடியிருப்பு கட்ட முடியும் என்ற சூழல் உள்ளது. நீதிமன்றம் உத்தரவில், 'நோட்டீஸ்' வழங்கியும் ஆபத்தான வீடுகளை காலி செய்யாமல் அடம் பிடித்து வசிக்கின்றனர். முன்பைவிட குடியிருப்பு மிகவும் வலுவிழந்து உள்ளது. வரும் பருவமழைக்கு தாக்குபிடிக்குமா என தெரியவில்லை. அசம்பாவிதம் நடந்தால், எங்கள் மீது நடவடிக்கை பாயும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காலதாமதம் ஏற்பட்டால், நிதி நெருக்கடி காரணமாக, 114 கோடி ரூபாயையும் வேறு திட்டத்திற்கு மாற்ற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us