/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவள்ளூர் அணி கிரிக்கெட்டில் அசத்தல்
/
திருவள்ளூர் அணி கிரிக்கெட்டில் அசத்தல்
ADDED : மார் 31, 2025 03:29 AM

சென்னை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன், செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான 'லீக்' கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள், பட்டாபிராம் இந்து கல்லுாரி மைதானத்தில் நடந்து வருகின்றன.
இதில், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிறுவனங்கள், கல்லுாரிகள், அமைப்புகளைச் சேர்ந்த 32 கிரிக்கெட் அணிகள், நான்கு பிரிவுகளில், தலா எட்டு அணிகளாக பங்கேற்றுள்ளன. போட்டிகள் 30 ஓவர் அடிப்படையில் நடக்கின்றன.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில், பிரிவு 2ல் இடம் பெற்றுள்ள பட்டாபிராம் கிரிக்கெட் குழு அணியுடன், திருவள்ளூர் கிரிக்கெட் குழு அணி மோதியது.
முதலில் களமிறங்கிய பட்டாபிராம் அணி, 30 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து, 212 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அரவிந்த் 62 ரன்கள் எடுத்தார்.
திருவள்ளூர் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் இளஞ்சேரல் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின், சவாலான இலக்குடன் களமிறங்கிய திருவள்ளூர் அணிக்கு, நவீன், பரத்குமார் இருவரும், எதிரணி பந்துகளை வேட்டையாடி ரன்களைக் குவித்தனர்.
இதனால் திருவள்ளூர் அணி 28.3 ஓவரில், 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில், அசத்தல் வெற்றி பெற்றது. பரத்குமார் ஆட்டமிழக்காமல் 75 ரன்களும், நவீன் 73 ரன்களும் குவித்தனர்.
மற்றொரு 'லீக்' போட்டியில், யுனிவர்சல் அணி 46 ரன் வித்தியாசத்தில் சுந்தர் அணியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.