/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவான்மியூர் பஸ் நிலைய மறுமேம்பாடு திட்டம் நிறுத்தம்?
/
திருவான்மியூர் பஸ் நிலைய மறுமேம்பாடு திட்டம் நிறுத்தம்?
திருவான்மியூர் பஸ் நிலைய மறுமேம்பாடு திட்டம் நிறுத்தம்?
திருவான்மியூர் பஸ் நிலைய மறுமேம்பாடு திட்டம் நிறுத்தம்?
ADDED : டிச 12, 2025 05:32 AM

சென்னை: திருவான்மியூர் பேருந்து நிலைய மறுமேம்பாடு தொடர்பான அடுத்தகட்ட பணிகளை நிறுத்த, மாநில நெடுஞ்சாலை ஆணையம், வீட்டுவசதி துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பல்வேறு திட்டங்களை சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சென்னையின் பல்வேறு இடங்களில் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம், பணிமனைகளை மறுமேம்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது.
அம்பத்துார், ஆவடி, திரு.வி.க., நகர் போன்ற பல்வேறு இடங்களில், இதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. திருவான்மியூர் பேருந்து நிலையம், பணிமனை வளாகத்தை மறுமேம்பாடு செய்ய திட்டமிடப்பட்டது.
இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு, 35.11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகம், அலுவலக வளாகத்துடன் கூடியதாக இந்த இடத்தை மறுமேம்பாடு செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கான வடிவமைப்பு இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் மாநில நெடுஞ்சாலை ஆணையம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு சமீபத்தில் கடிதம் எழுதி உள்ளது.
அதில், திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை, 14 கி.மீ., தொலைவுக்கு உயரடுக்கு மேம்பாலம் அமைக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
இதற்கான வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு, டெண்டர் கோரும் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தின் துவக்க பகுதியாக திருவான்மியூர் இருக்கும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேம்பாலத்துக்கு வாகனங்கள் செல்வதற்கான நுழைவு, திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில் அமைய உள்ளது. இதனால் அங்கு, இரு வேறு துறைகள் தனித்தனியாக திட்டங்களை செயல்படுத்தும் போது பயன்பாட்டில் குழப்பம் ஏற்படும்.
எனவே, இங்கு மேம்பாலத்தின் வடிவமைப்பு, கட்டுமானத்தை கருத்தில் வைத்து திருவான்மியூர் பேருந்து நிலைய மறுமேம்பாட்டு பணிகளை மாற்றுவது நல்லது.
எனவே, தற்போது நடந்து வரும் பணிகளை நிறுத்தி, சி.எம்.டி.ஏ., மற்றும் நெடுஞ்சாலை துறையினர் கூட்டாக தொழில்நுட்ப ஆய்வு செய்து திட்டங்களை இறுதி செய்யலாம்.
அதுவரை தற்போதைய பணிகளை நிறுத்தலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

