/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை... 16 கி.மீ., மேம்பாலம்! 45 நிமிட பயணம் இனி 10 நிமிடமாக குறையும்
/
திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை... 16 கி.மீ., மேம்பாலம்! 45 நிமிட பயணம் இனி 10 நிமிடமாக குறையும்
திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை... 16 கி.மீ., மேம்பாலம்! 45 நிமிட பயணம் இனி 10 நிமிடமாக குறையும்
திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை... 16 கி.மீ., மேம்பாலம்! 45 நிமிட பயணம் இனி 10 நிமிடமாக குறையும்
ADDED : ஆக 09, 2024 12:09 AM

கிழக்கு கடற்கரை சாலையில், திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., துாரம் ஆறு வழிச்சாலையாக மாற்றப்படும் நிலையில், திருவான்மியூர் ரயில் நிலையம் முதல் உத்தண்டி வரை, 16 கி.மீ., நீளத்திற்கு, சாலையின் மைய பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, 52 லட்சம் ரூபாயில், திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையின் முக்கிய சாலையாக, இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., நீளம் உடையது. இடத்தைப் பொறுத்து, 60 முதல் 70 அடி அகலத்தில், நான்கு வழிச் சாலையாக உள்ளது.
இந்த சாலையில், வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவான்மியூரில் இருந்து உத்தண்டி நோக்கி, தினமும் 1.20 லட்சம் வாகனங்கள் செல்கின்றன.
எதிர்கால போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்ற முடிவு செய்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. இழப்பீடு வழங்க 778 கோடி ரூபாயும், சாலை விரிவாக்கத்திற்கு, 174.92 கோடி ரூபாயையும் தமிழக அரசு ஒதுக்கியது.
சாலை விரிவாக்க பணி, கடந்த 2008ம் ஆண்டு துவங்கியது. நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய்த் துறையும், சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையும் மேற்கொண்டு வருகின்றன.
இப்பணிகள் துவங்கி, 16 ஆண்டுகள் ஆகின்றன. அப்போதே முழு வீச்சுடன் பணிகள் நடந்திருந்தால், தற்போது, ஆறு வழிச் சாலையாக மாறி இருக்கும்.
அரசு நிதி ஒதுக்கியும், நிலம் கையகப்படுத்தும் குழு தாசில்தார்கள், சர்வேயர்கள் ஒத்துழைப்பு இல்லாததால், நிலத்திற்கு இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு, சாலை விரிவாக்க பணிகள் மந்தமாக நடந்தன.
தற்போது ஓராண்டாக, பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. மொத்தமுள்ள, 10.5 கி.மீ., துாரத்தில் ஆக்கிரமிப்புகள் மற்றும் பட்டா, நத்தம் போன்ற வகைப்பாடு இடங்கள் உள்ளன.
வருவாய் கிராமம் வாரியாக, பட்டாதாரர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி, 95 சதவீதம் முடிந்துள்ளது. கட்டடங்கள் இடிக்கப்பட்ட பகுதியில், சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், சாலை மைய பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது.
ஏற்கனவே, டைடல் பார்க் சந்திப்பு அருகில், எல்.பி., சாலையில் இருந்து கொட்டிவாக்கம் வரை, 300 கோடி ரூபாயில், 2.2 கி.மீ., துாரத்தில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, இத்திட்டம் தள்ளிச் சென்றது. இந்நிலையில், இந்த மேம்பாலத்தை, திருவான்மியூர் ரயில் நிலையத்தில் இருந்து, இ.சி.ஆர்., உத்தண்டி சுங்கச்சாவடி வரை, 16 கி.மீ., நீளத்திற்கு நீட்டிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்க, 52 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர்மட்ட மேம்பால பணிகளை துவக்கவே, தற்போது திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., துாரம் ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணி விரைவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, இ.சி.ஆரில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இழப்பீடு வழங்குவது, வடிகால் கட்டி சாலை விரிவாக்கம் செய்வது வேகமாக நடக்கிறது. திருவான்மியூர், நீலாங்கரை பகுதியில் விரிவாக்கம் செய்ய வேண்டி உள்ளது. ஆறு மாதங்களில் சாலை விரிவாக்கத்தை முடிக்கும் வகையில், பணியை வேகப்படுத்தி உள்ளோம்.
உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது. திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை செல்ல, 45 நிமிடம் வரை ஆகிறது. மேம்பாலம் அமைத்தால், 10 நிமிடத்தில் செல்ல முடியும். எரிபொருள், பயண நேரம் மிச்சமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- -நமது நிருபர்- -