/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதுகுதண்டு வட பாதிப்பிற்கு காரணமாகும் திருவேற்காடு சாலை
/
முதுகுதண்டு வட பாதிப்பிற்கு காரணமாகும் திருவேற்காடு சாலை
முதுகுதண்டு வட பாதிப்பிற்கு காரணமாகும் திருவேற்காடு சாலை
முதுகுதண்டு வட பாதிப்பிற்கு காரணமாகும் திருவேற்காடு சாலை
ADDED : டிச 08, 2025 05:44 AM

திருவேற்காடு: திருவேற்காடு, ராணி அண்ணா நகர் பிரதான சாலை மழையால் குண்டும், குழியுமாக மாறியதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
திருவேற்காடு நகராட்சி, ராணி அண்ணா நகர் பிரதான சாலை, 5, 8, 9வது வார்டுகளுக்கு உட்பட்டது. இந்த பிரதான சாலை 1.5 கி.மீ., துாரம் உடையது.
இதில், செஞ்சுரியன் அவென்யூ, செல்வ லட்சுமி நகர், பெரியார் நகர் மற்றும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் 15,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், மேற்படி பிரதான சாலையில், 1.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. தார்ச்சாலை முறையாக போடாததால், இரண்டு ஆண்டுகளில் பல்லிளித்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
இதனால், சுற்று வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என தினமும் 30,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், முதுகு தண்டுவடத்தில் அழுத்தம் ஏற்பட்டு வலியால் அவதிப்படுகின்றனர். வாகனங்களும் அடிக்கடி பஞ்சர் மற்றும் பழுது ஏற்படுகிறது.
நகராட்சிக்கு வரி செலுத்தி விட்டு, நகராட்சி சாலையில் ஏற்படும் பிரச்னைக்கு தனியாக உழைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் குமுறி வருகின்றனர்.
தொடர் புகாரை அடுத்து, கடந்த ஆக., 11ம் தேதி, திருவேற்காடு நகராட்சி நிர்வாகம் மேற்படி ராணி அண்ணா நகர் பிரதான சாலையில், இரவோடு இரவாக 'வெட் மிக்ஸ்' கொட்டி தற்காலிகமாக சீரமைத்தது. 'வெட் மிக்ஸ்' கொட்டி ஒரு மாதத்திற்குள், சாலை மீண்டும் பழையபடி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

