ADDED : டிச 12, 2024 12:34 AM

திருவொற்றியூர், -- திருவொற்றியூர் மார்க்கெட்டில், மாநகராட்சிக்கு சொந்தமான பட்டினத்தார் மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் பழுதடைந்துள்ளதால், 25,000 சதுர அடி பரப்பளவில், 10 கோடி ரூபாய் மதிப்பில், சி.எம்.டி.ஏ., சார்பில், நவீன மீன் அங்காடி கட்டப்பட உள்ளது.
முதற்கட்டமாக, மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் நேற்று, கடைகள் குறித்து கணக்கெடுக்க சென்றனர். அப்போது, ஒதுக்கீடு வழங்க வேண்டி, மீனவ பெண்களிடம் கைரேகை கோரியுள்ளனர்.
ஒதுக்கீட்டுக்கான ரசீது தந்தால் மட்டுமே, கைரேகை வைக்க முடியும் என, மீனவர்கள் கூறிவிட்டனர். கோரிக்கை ஏற்கப்படாததால், மீன்களை தரையில் கொட்டி, மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த, ஏழாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக், மீனவ பெண்களை சமாதானம் செய்தார். மண்டல உதவி கமிஷனர் புருஷோத்தமனை அழைத்து பேச்சு நடத்தினார். 'தற்போது கடை வைத்துள்ள அனைவருக்கும் நவீன அங்காடியில் கடைகள் ஒதுக்கப்படும்.
அதற்கான உறுதி அளித்தபின், தற்போதுள்ள கடைகள் இடிக்கப்படும்' என, உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மீனவ பெண்கள் கலைந்து சென்றனர்.
