/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சினிமாவில்கூட இப்படி நடக்காது! வழக்கறிஞரை எச்சரித்த நீதிபதிகள்
/
சினிமாவில்கூட இப்படி நடக்காது! வழக்கறிஞரை எச்சரித்த நீதிபதிகள்
சினிமாவில்கூட இப்படி நடக்காது! வழக்கறிஞரை எச்சரித்த நீதிபதிகள்
சினிமாவில்கூட இப்படி நடக்காது! வழக்கறிஞரை எச்சரித்த நீதிபதிகள்
ADDED : அக் 24, 2024 12:35 AM
சென்னை,
பணம் கொடுக்கல் வாங்கலில், பெண் கடத்தி கொலை செய்யப்பட்டதாக வழக்கறிஞர் அளித்த புகாரில் உண்மையில்லை என்பதை அறிந்த, சென்னை உயர்நீதிமன்றம், 'சினிமாவில்கூட இப்படி சம்பவத்தை பார்த்தது இல்லை; நீதிமன்ற நேரத்தை இப்படி வீணடிக்கக்கூடாது' என, எச்சரித்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், கடந்த 21ம் தேதி, வழக்கறிஞர் தட்சணாமூர்த்தி ஆஜராகி முறையிட்டதாவது:
கலப்பு திருமணம் செய்து கொண்ட காமாட்சி என்ற பெண், சென்னை வடபழனியில் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவரை, இம்மாதம் 19ம் தேதி, ஒரு கும்பல் கடத்தி சென்றுவிட்டது. மறுநாள், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்க மறுக்கின்றனர்; பிரதே பரிசோதனை கூட செய்யவில்லை.
இவ்வாறு அவர் முறையிட்டார்.
இவரின் முறையீட்டை ஏற்ற, முதல் பெஞ்ச், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இது தொடர்பாக பதிலளிக்க, அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ''வழக்கறிஞரின் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் முறையீடு செய்த வழக்கறிஞருக்கும், இந்த தகவலை வழக்கறிஞருக்கு கூறிய பெண்ணிற்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்துள்ளது.
சம்பந்தப்பட்ட பெண் சொன்னதை உண்மை என்று கருதி, இங்கு முறையீட்டுள்ளார்,'' என்றார்.
இதையடுத்து, 'வழக்கறிஞர் கூறிய சம்பவத்தை சினிமாவில்கூட பார்த்தது இல்லை. நீதிமன்றத்தில் முறையீடு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.
நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் செயல்பட வேண்டாம்' என, வழக்கறிஞரை எச்சரித்த முதல் பெஞ்ச், தாமாக முன் வந்து எடுத்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.