ADDED : மே 17, 2026 03:56 AM
அசோக் நகர்: இருசக்கர வாகனத்தில் சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்த மூவரை, போலீசார் கைது செய்தனர்.
சாலிகிராமம், மதியழகன் நகர் ஸ்ரீ ராமலு தெருவைச் சேர்ந்தவர் ராகவன் பாபு, 38; வடபழனியில், காலிபிளவர் பக்கோடா கடை நடத்தி வருகிறார்.
கடந்த 14ம் தேதி, கோடம்பாக்கம், அம்பேத்கர் சாலை, ரத்தினாம்பாள் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராகவன் பாபுவை, வாலிபர் ஒருவர் நிறுத்தி, செல்லும் வழியில் உறவினர் வீட்டில் விடும்படி கேட்டுள்ளார்.
அங்கு மறைந்திருந்த இருவர் ஓடி வந்து, ராகவன்பாபுவை சுற்றி வளைத்தனர்.
மூவரும் கத்தியை காட்டி மிரட்டி, ராகவன் பாபு வங்கி கணக்கில் இருந்து, மொபைல் பணப்பரிமாற்ற செயலியான 'ஜிபே' மூலம் ஒரு வங்கி கணக்கிற்கு 9,000 ரூபாய் அனுப்பி, தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து விசாரித்த அசோக் நகர் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ், 22, சூளைமேடு தனுஷ், 22, தாஸ், 19, ஆகிய மூவரை, நேற்று கைது செய்தனர்.
தாஸ் மீது ஒன்று, சுபாஷ் மீது இரண்டு, தனுஷ் மீது ஐந்து என குற்ற வழக்குகள் உள்ளன.
