/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூன்று பிரதான சாலைகள் படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாறும் அவலம்
/
மூன்று பிரதான சாலைகள் படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாறும் அவலம்
மூன்று பிரதான சாலைகள் படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாறும் அவலம்
மூன்று பிரதான சாலைகள் படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாறும் அவலம்
ADDED : ஜூலை 28, 2025 03:13 AM

போரூர்:போரூர், வானகரத்தை ஒட்டியுள்ள சமயபுரம், வானகரம், வானகரம் யூனியன் ஆகிய மூன்று பிரதான சாலைகள், குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் தட்டுதடுமாறி செல்கின்றனர்.
வளசரவாக்கம் மண்டலம், வானகரம் ஊராட்சி எல்லையில் போரூரில் உள்ள சமயபுரம் பிரதான சாலை உள்ளது.
சென்னை - மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில், 2 கி.மீ., தொலைவில், சுங்கச்சாவடிக்கு முன்பாக பிரிந்து, போரூர் - கிண்டி செல்லும் பரங்கிமலை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சமயபுரம் பிரதான சாலை இணைகிறது.
இந்த சாலையில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதில், வானகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமயபுரம் பிரதான சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, பல்லாங்குழியாக உள்ளன.
வானகரம் பிரதான சாலை தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையை கடந்து, போரூர் - காரம்பாக்கம் செல்லும் பிரதான சாலையாக, வானகரம் பிரதான சாலை உள்ளது.
மாநில நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் இருந்த 3 கி.மீ., துாரம் உடைய இச்சாலை தற்போது, மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் குறுக்கே செல்லும் சென்னை பை - பாஸ் சாலை மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதையில், அணுகு சாலைகள் மற்றும் வானகரம் பிரதான சாலை என, நான்கு முனை சந்திப்பு உள்ளது. இந்த சாலை படுமோசமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
வானகரம் யூனியன் சாலை வளசரவாக்கம் ஆற்காடு சாலை மற்றும் தாம்பரம் - மதுரவாயல் சர்வீஸ் சாலையை இணைப்பது, வானகரம் பிரதான சாலை. வானகரம் ஊராட்சி, வளசரவாக்கம் மண்டல எல்லையில் உள்ளது.
வானகரம் ஊராட்சி பராமரிப்பில் உள்ள இச்சாலை, பல ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் சாலையாக மாற்றப்பட்டது. கான்கிரீட் சாலை ஆங்காங்கே பெயர்ந்து, பல்லாங்குழி போல் மாறிவிட்டன. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு முதுகுவலி ஏற்படுவதுடன், அச்சாலையில் செல்லும் வாகனங்கள் பழுதடையும் நிலை உள்ளது.
மேற்கண்ட மூன்று பிரதான சாலைகளும் குண்டும் குழியுமாக, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுவதால், காலை மற்றும் மாலை நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
இந்த சாலைகளில் போலீசாரும் பணியில் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதுடன், அடிதடி சம்பவங்களும் நடக்கின்றன.
எனவே, முக்கியமான மூன்று பிரதான சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.