/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெவ்வெறு விபத்துகளில் சிறுவன் உட்பட மூவர் பலி
/
வெவ்வெறு விபத்துகளில் சிறுவன் உட்பட மூவர் பலி
ADDED : ஜன 02, 2025 12:29 AM
சென்னை, கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி சிப்காட் அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணியளவில், சாலை ஓரத்தில் சிறுவன் ஒருவன் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தான்.
பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து குறித்து விசாரித்ததில், இறந்து கிடந்த சிறுவன், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த திவ்யான், 16, என்பதும், கேளம்பாக்கம் அடுத்த கழிப்பட்டூர் பகுதியில் தங்கி, மெக்கானிக் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவு, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி இறந்தது தெரிந்தது. விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.
மற்றொரு சம்பவம்
அதேபோல, பெரும்பாக்கம், பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நித்திஷ், 18; வடமாநில இளைஞர். இவர், பெரும்பாக்கத்தில் உள்ள டூ - வீலர் கடையில் மெக்கானிக் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணியளவில், டூ - வீலரில், நுாக்கம்பாளையம் பிரதான சாலை வழியாக வீட்டிற்கு சென்றார். சிவன்கோவில் அருகே, சாலையோரம் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் இறப்பு
பெரும்பாக்கம், பசும்பொன் நகர், நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 70. இவர் நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், மேடவாக்கம் பிரதான சாலையை கடந்தபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம், அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
அங்கிருந்தோர் பன்னீர்செல்வத்தை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். பன்னீர்செல்வம் உடலை போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இருசக்கர வாகனத்தில் வந்த தவசி, சூர்யா இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.