ADDED : ஆக 05, 2025 12:23 AM
பெரம்பூர், தொடர் திருட்டில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் உள்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூரை சேர்ந்தவர் நடராஜன், 60. பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி இரவுப் பணி முடித்து விட்டு, கதவை மூடாமலேயே படுத்துள்ளார். மறுநாள் காலை பார்த்த போது, பீரோவில் இருந்த 4,000 ரூபாய் பணம், வெள்ளி விளக்கு, மொபைல்போன்கள் காணாமல் போயிருந்தன. இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு புகார் அளித்த நிலையில், செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வந்தனர்.
அதேபோல், வியாசர்பாடியை சேர்ந்தவர் ராஜா, 46. கொத்தனாராக வேலை பார்க்கிறார். கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி மைத்துனன் நந்தகுமாரின் யமஹா இருசக்கர வாகனத்தை பயன்படுத்தியுள்ளார். வீட்டின் வெளியே பைக்கை நிறுத்தி விட்டு சென்ற நிலையில் மறுநாள் காலை பார்த்த போது பைக் காணவில்லை. இதுகுறித்து செம்பியம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இவ்விரண்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட, செங்குன்றத்தை சேர்ந்த கிருபாகரன், 23, வியாசர்பாடியை சேர்ந்த தனுஷ், 21 மற்றும் 16 வயது சிறுவன் என மூவரை கைது செய்து, இவர்களிடமிருந்து யமஹா பைக், ஆக்டிவா மற்றும் டியோ ஸ்கூட்டர் உள்பட மூன்று இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

