/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூன்று லாரிகள் மோதல் ஒருவர் தீக்கிரை; ஐவர் காயம்
/
மூன்று லாரிகள் மோதல் ஒருவர் தீக்கிரை; ஐவர் காயம்
ADDED : ஜன 05, 2024 12:16 AM

சிங்கபெருமாள்கோவில், மறைமலை நகர் தனியார் நிறுவனத்தில் இருந்து கார் உதிரி பாகங்களை ஏற்றி, ஒரகடம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி, நேற்று அதிகாலை 1:30 மணிக்கு, சிங்கபெருமாள்கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலை சந்திப்பில் நின்றது.
அப்போது, எண்ணுாரிலிருந்து, சிமென்ட் பவுடர் ஏற்றிய கன்டெய்னர் லாரியும், தாம்பரத்தில் இருந்து சோப்பு பொருட்களை ஏற்றி புதுச்சேரி நோக்கி சென்ற டிப்பர் லாரியும், அதிவேகத்தில் வந்தன.
சிங்கபெருமாள்கோவில் சாலை சந்திப்பில் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது, அதிவேகமாக வந்த இரண்டு லாரிகளும் ஒன்றன்பின் ஒன்றாக பயங்கரமாக மோதின.
இதில், டிப்பர் லாரி தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த மகேந்திரா சிட்டி, மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், டிப்பர் லாரியில் இருந்த புதுச்சேரியைச் சேர்ந்த சந்திரசேகர், 36, என்பவர், உடல் கருகி இறந்தார். மேலும், கன்டெயனர் லாரியில் சென்ற மதுராந்தகம் ஏழுமலை, 46, திண்டுக்கல் முத்துபாண்டியன், 37, கோட்டைராஜ், 32, சிவராஜ், 34, அய்யனார், 35, ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.