/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திக்...திக்... 130 அடி உயர அந்தரத்தில் தவித்த 36 பேர்; மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
/
திக்...திக்... 130 அடி உயர அந்தரத்தில் தவித்த 36 பேர்; மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
திக்...திக்... 130 அடி உயர அந்தரத்தில் தவித்த 36 பேர்; மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
திக்...திக்... 130 அடி உயர அந்தரத்தில் தவித்த 36 பேர்; மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
UPDATED : மே 28, 2025 08:17 AM
ADDED : மே 27, 2025 11:17 PM

நீலாங்கரை : சென்னை இ.சி.ஆரில் உள்ள வி.ஜி.பி., பொழுதுபோக்கு பூங்காவில் நேற்றிரவு, பிரமாண்ட ராட்டினத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டாதால், அதில் பயணித்த, 36 பேர் பீதியில் அலறினர். தீயணைப்புத்துறையினர் மூன்று மணி நேரம் போராடி, அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
சென்னை, கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில், வி.ஜி.பி., என்ற பொழுதுபோக்கு மையம் உள்ளது.
கோடை காலம் என்பதால், குழந்தைகள், பெரியவர்கள் என, நுாற்றுக்கணக்கானோர், இம்மையத்திற்கு நேற்று வந்தனர். ராட்டினம், நீர் விளையாட்டு உள்ளிட்டவற்றில் பொழுதுபோக்கினர்.
இதில், கீழிலிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும், தலைகீழாகவும் சுற்றும் ராட்டினத்தில், இரவு 7:00 மணிக்கு, 12 குழந்தைகள், 10 பெண்கள், ஒரு வயதானவர் உட்பட 36 பேரை, ஊழியர்கள் ஏற்றினர்.
நெருக்கடி
ராட்டினம் 130 அடி உயர உச்சிக்கு சென்றபோது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், அந்தரத்தில் நின்றது. இதனால் பீதியடைந்த வாடிக்கையாளர்கள், கடும் கூச்சலிட்டனர்.
ராட்டினம் இயங்காதது குறித்து அறிந்த வி.ஜி.பி., நிறுவன ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள், உடனடியாக அங்கு விரைந்தனர். வாடிக்கையாளர்களை கீழே இறக்க, அவர்களது கிரேன் இயந்திரத்தை எடுத்து சென்றனர்.
ஆனால் அந்த இயந்திரம், உயரம் குறைவாக இருந்ததால், ராட்டினத்தில் சிக்கியோரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதற்கிடையே, ராட்டினத்தில் மேலே சிக்கியோரை, இ.சி.ஆரில் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து, வி.ஜி.பி.,க்குள் நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து, திருவான்மியூர், துரைப்பாக்கம் தீயணைப்பு படையினர் விரைந்தனர். மீட்பு வாகனம் உள்ளிட்ட உபகரணங்கள் அவர்களிடம் இல்லாததால், வாடிக்கையாளர்களை மீட்க முடியுமா, முடியாதா என்பதில் மேலும் நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து, தாம்பரம்,
தொடர்ச்சி ௪ம் பக்கம்
முதல் பக்க தொடர்ச்சி
கிண்டி, அசோக் நகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து, 183 அடி உயரம் உடைய, 'ஸ்கை லிப்ட்' ஏணி வசதி உடைய வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
இவற்றின் வாயிலாக, ஐந்து பேர் வீதம், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக கீழே இறக்கினர். மூன்று மணி நேரமாக ராட்டினத்தில் தவித்தவர்கள், பெரும் நிம்மதி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
பயத்தில் அலறினோம்
உயிரை கையில் பிடித்தபடி, 150 அடி உயரத்தில் இருந்தோம். குழந்தைகள், பெண்கள் பயத்தில் அழுதனர். அவர்களுக்கு தைரியம் வரவழைக்க தொடர்ச்சியாக பேசினோம். வி.ஜி.பி., பொழுதுபோக்கு மையத்தில், போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யவில்லை. இனிமேலாவது, பாதுகாப்பை உறுதி செய்தபின், ராட்டினத்தை இயக்க வேண்டும்.
- பரிதி செல்வம்,
ராட்டினத்தில் சிக்கியவர்
ராட்சத ராட்டினத்தை இயக்கியபோது, மோட்டாரில் திடீரென சத்தம் கேட்டது. உடனே, ராட்டின இயக்கம் நிறுத்தப்பட்டது.
ராட்டினத்தில் சிக்கியிருந்த, 30க்கும் மேற்பட்டோரை மீட்க, எங்களிடம் இருந்த கிரேன் வாயிலாக முயற்சித்தோம். முடியாததால், தீயணைப்பு துறையினரின் உதவி கோரினோம். அவர்களும் உடனே வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டர். யாருக்கும், எந்த பாதிப்பும் இல்லை.
- வி.ஜி.பி., நிர்வாகம்.