/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துவங்கியது திருப்பதி திருக்குடை ஊர்வலம்
/
துவங்கியது திருப்பதி திருக்குடை ஊர்வலம்
ADDED : அக் 03, 2024 12:19 AM

பிராட்வே, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி மாத பிரமோற்சவத்தின்போது, ஏழுமலையானின் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் சார்பில், வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டிற்கான திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம், பிராட்வே, சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து, நேற்று காலை 10:30 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. திருக்குடைகள் ஊர்வலத்தை, திருக்குறுங்குடி ஜீயர் மட மடாதிபதிகள் ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் சுவாமிகள், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை அயனாவரம், வில்லிவாக்கம், திருமுல்லைவாயில், திருவள்ளூர் வரை திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பப்பட்டு, அக்., 7ல், திருமலையை சென்றடையும். திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம், திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
விழாவில், ஹிந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்ஆர்.கோபால்ஜி பேசுகையில், ''திருப்பதி திருக்குடையை மட்டும் தான், 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தரிசனம் செய்கின்றனர். இதை வெறும் திருக்குடையாக மட்டும் திருமலைக்கு எடுத்து செல்லவில்லை.
லட்சக்கணக்கான தமிழக மக்களின் பிரார்த்தனைகளைத் தான், திருமலையில் சமர்ப்பணம் செய்கிறோம். பகவானிடம் பக்தியோடு சரணாகதி அடைந்தால், பகவான் தேவையான அனுக்கிரகங்களையும், நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பார்,'' என்றார்.

