sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாந்தி, பேதி, தொற்று நோய் பாதிப்புகளை தடுக்க...முன்னெச்சரிக்கை!:குடிநீர் தரமறிய வாரியம், சுகாதார துறை கைகோர்ப்பு

/

வாந்தி, பேதி, தொற்று நோய் பாதிப்புகளை தடுக்க...முன்னெச்சரிக்கை!:குடிநீர் தரமறிய வாரியம், சுகாதார துறை கைகோர்ப்பு

வாந்தி, பேதி, தொற்று நோய் பாதிப்புகளை தடுக்க...முன்னெச்சரிக்கை!:குடிநீர் தரமறிய வாரியம், சுகாதார துறை கைகோர்ப்பு

வாந்தி, பேதி, தொற்று நோய் பாதிப்புகளை தடுக்க...முன்னெச்சரிக்கை!:குடிநீர் தரமறிய வாரியம், சுகாதார துறை கைகோர்ப்பு


ADDED : செப் 02, 2024 01:59 AM

Google News

ADDED : செப் 02, 2024 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில், சென்னையில் வினியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை உடனுக்குடன் அறிந்து நடவடிக்கை எடுக்க, குடிநீர் வாரியம், சுகாதாரத் துறை கைகோர்த்துள்ளது. இதனால், மழைக்கால தொற்றுகளால் ஏற்படும் வாந்தி, பேதி போன்றவற்றை தடுக்க முடியும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சென்னை குடிநீர் வாரியம் சார்பில், 7.80 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. தினமும் 106 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த குடிநீர், ஏரிகள் மற்றும் கடல்நீரை சுத்திகரித்து வழங்கப்படுகிறது. இதற்காக, 7,268 கி.மீ., துாரத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன.

இதில், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட விரிவாக்கத்திற்கு முந்தைய மண்டலங்களில், குடிநீர் குழாய்கள் பதித்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன.

சிக்கல் நீடிப்பு


மக்கள் தொகைக்கு ஏற்ப குழாயின் கொள்ளளவு, தரத்தை அதிகரிக்கவில்லை. இதனால், கொள்ளளவை மீறி செல்லும் குடிநீர் குழாயில் சேதம், வெடிப்பு ஏற்படுகிறது.

தவிர, வடிகால், கால்வாய், மெட்ரோ ரயில், மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள் உள்ளிட்ட பணிகளுக்காக சாலையில் பள்ளம் தோண்டும்போது, குடிநீர், கழிவுநீர் குழாய்கள் சேதமடைகின்றன.

இதனால், குடிநீரில் கழிவுநீர் கலப்பு, துர்நாற்றம் போன்ற பிரச்னை ஏற்படுகிறது. இதை பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதால், டைபாய்டு, வாந்தி, பேதி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

முறையாக சுத்திகரிக்காத மற்றும் நீண்ட நாள் தேக்கி வைத்த குடிநீரும், தொற்று நோய் பதிப்புக்கு வழிவகுக்கிறது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் துவங்க உள்ளதால், குடிநீரால் ஏற்படும் பாதிப்பு மேலும் அதிகரிக்கும்.

இதை கருத்தில் கொண்டு, வாரியம் வினியோகிக்கும் குடிநீரின் தரத்தை அதிகரிக்கும் வகையில், சுகாதாரத் துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

இதுவரை, வாரியம் மற்றும் சுகாதாரத் துறை தனித்தனியாக, குடிநீரின் தரத்தை ஆய்வு செய்து, மேல் நடவடிக்கை எடுத்தனர். இதில், நிர்வாக குளறுபடி ஏற்பட்டதால், தரத்தை உறுதி செய்வதில் சிக்கல் நீடித்தது.

வலியுறுத்தல்


தற்போது குடிநீரின் தரத்தை உடனுக்குடன் அறிந்து நடவடிக்கை எடுக்கவும், மழைக்கால நோய்களை தடுக்கவும், இரு துறைகளும் இணைந்துள்ளன.

சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

குடிநீரில் டி.டி.எஸ்., அளவு 300 முதல் 500 இருக்க வேண்டும். அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால், தரத்தை பரிசோதிக்க வலியுறுத்தி உள்ளோம்.

இதற்காக, ஒவ்வொரு வார்டிலும், வாரம் இரு இடங்களில் குடிநீர் மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்புகிறோம்.

வரும் நாட்களில், வாரத்திற்கு ஒருமுறை செவ்வாய்க்கிழமை தோறும், குடிநீர் வாரிய பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் இணைந்து, வார்டுகளில் குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்வர். குறைகளை நிவர்த்தி செய்வது, குடிநீர் தரம் மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தனியார் லாரி குடிநீர் தரம் கேள்விக்குறி?


சென்னையில், இணைப்பு இல்லாத மற்றும் குழாய் அழுத்தம் குறைவான தெருக்களில் 10,000க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் உள்ளன. லாரியில் கொண்டுவரும் குடிநீர், இதில் நிரப்பப்படும். அப்படி நிரப்பும்போது, மூடிகள் கீழே விழும்; சேதமடையும். இதனால், பல தொட்டிகளில் மூடிகள் இல்லாமல் உள்ளன. அதில், மரக்கிளைகள், எலி, பறவைகள் எச்சம் போன்றவை விழுவதால், குடிநீர் மாசுடைந்து நோய் பாதிப்புக்கு வழிவகுக்கிறது.
தவிர, தனியார் குடிநீர் லாரி வினியோகிக்கும் நீரையே சமைக்கவும், குடிக்கவும் வீடுகள், ஹோட்டல்களில் பயன்படுத்துகின்றனர். ஆழ்துளை கிணறுகளில் எடுக்கப்படும் இந்த நீரில் குளோரின் கலப்பதில்லை. இதனால், தனியார் லாரிகளின் குடிநீர் தரத்தை, மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும்.



குடிநீர் தரம் உடனுக்குடன் கண்டறிய நடவடிக்கை


குடிநீர் தரம் குறித்து, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:மண்டலங்களில் சேகரிக்கப்படும் குளோரின் அளவு, கலங்கல், நிறம் மாறுதல், தாது கரைசல் போன்றவை குறித்து, கையடக்க கருவிகள் வாயிலாக பரிசோதிக்கிறோம்.
இதில் சந்தேகம் இருந்தால், பரிசோதனை கூடத்தில் அனுப்பி தரம் உறுதி செய்யப்படும். இதற்கு முன் பரிசோதனை முடிவு கிடைக்க ஐந்து நாட்கள் ஆனது. இனி ஒரே நாளில் முடிவு கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இதை வைத்து, குடிநீரில் கழிவுநீர் எவ்வளவு கலந்துள்ளது, தாதுக்களின் அளவு எவ்வளவு என்பது குறித்து அறிந்து, குடிநீர் தரத்தை மேம்படுத்த முடியும். இதுவரை தனியாக ஆய்வு நடத்திய நிலையில், இனி சுகாதாரத் துறையுடன் இணைந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுவதால், தொற்று பாதிப்புகளை குறைக்க முடியும்.
குடிநீர் சம்பந்தமான புகார் அளித்தால், வார்டு பொறியாளர்கள் வீட்டிற்கே வந்து, குடிநீரை பரிசோதித்து, அதன் முடிவை தெரிவித்து, உடனடி நடவடிக்கை எடுப்பர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



குடிநீர் இணைப்பு விபரம்


குடிநீர் இணைப்பு - 7.80 லட்சம்
வினியோகம் - 106 கோடி லிட்டர்
குழாய் துாரம் - 7,268 கி.மீ.,
மாதிரி சேகரிப்பு - 200 இடங்கள் (மண்டலம் தோறும்)
புகார் தெரிவிக்க - 044 - 4567 4567 / 1916
குடிநீர் தொட்டிகளை ஆண்டுக்கு இருமுறை சுத்தம் செய்ய வேண்டும். வீட்டு கழிவுநீர் சேம்பர்களை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். குடிநீரை காய்ச்சி பருகுவது சிறந்தது.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us