/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தக்காளி விலை ஏற்றம் கிலோ ரூ.80 விற்பனை
/
தக்காளி விலை ஏற்றம் கிலோ ரூ.80 விற்பனை
ADDED : நவ 23, 2025 04:17 AM
கோயம்பேடு: கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால், மொத்த விற்பனையில் கிலோ 60 ரூபாய்க்கும், சில்லரை விற்பனையில் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை தினமும் 1,200 டன் தக்காளி தேவை உள்ளது. தக்காளி அதிகம் விளையும் கிருஷ்ணகிரி, ஓசூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால், கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.
நேற்று 500 - 700 டன் தக்காளி மட்டுமே வந்தது. அதிலும், முதல் ரக தக்காளி, 300 டன் மட்டுமே வந்தது. நேற்று முன்தினம் தக்காளி 20 - 30 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், மொத்த விற்பனையில், ஒரே நாளில் கிலோவிற்கு 20 - 30 ரூபாய் அதிகரித்துள்ளது.
அதன்படி, முதல் ரகம் 60 ரூபாய், இரண்டாம் ரகம் 40 - 50 ரூபாய்க்கும், சில்லரை விற்பனையில் முதல் ரகம் தக்காளி கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கிலோ மல்லி பூ ரூ.2,700 அதேபோல், கோயம்பேடு சந்தைக்கு ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஊட்டி, திண்டுக்கல், ஆந்திரா, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து, அதிக அளவில் பூக்கள் வருகின்றன.
மழையால், கோயம்பேடு சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. மேலும், கார்த்திகை மாதம் துவங்கியதால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இன்று முகூர்த்த நாள் என்பதால், பூக்களின் விலை நேற்று அதிகரித்து காணப்பட்டது. கிலோ பன்னீர் ரோஜா - 100; சாக்லேட் ரோஜா - 140; சாமந்தி - 140; முல்லை - 1,050; மல்லிகை - 2,700; கனகாம்பரம் 800 - 1,000 ரூபாய்க் கு விற்பனையாகின.

