/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூன்று நாள் தொடர் விடுமுறை கிளாம்பாக்கத்தில் குவிந்த பயணியர்
/
மூன்று நாள் தொடர் விடுமுறை கிளாம்பாக்கத்தில் குவிந்த பயணியர்
மூன்று நாள் தொடர் விடுமுறை கிளாம்பாக்கத்தில் குவிந்த பயணியர்
மூன்று நாள் தொடர் விடுமுறை கிளாம்பாக்கத்தில் குவிந்த பயணியர்
ADDED : ஆக 15, 2025 12:17 AM

கிளாம்பாக்கம்,
மூன்று நாள் தொடர் விடுமுறையால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், நேற்று இரவு, வெளியூர் செல்லும் பயணியர் கூட்டம் அலைமோதியது.
போதிய பேருந்துகள் இயக்கப்படாததாலும், முன்பதிவு செய்த பேருந்துகள் உரிய நேரத்தில் வராததாலும், பயணியர் போக்குவரத்து ஊழியர்களிடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது.
தொடர் விடுமுறை நாட்களில், சென்னையிலிருந்து வெளியூர் செல்வோர் எண்ணிக்கை 10 மடங்காக அதிகரிக்கிறது.
இவர்களில் கணிசமானோர் சொந்த வாகனங்களிலும், ஆம்னி பேருந்துகளிலும் பயணிக்கின்றனர். நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் அரசு பேருந்துகளை மட்டுமே நம்பி உள்ளனர்.
இவர்களின் வசதிக்காக, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து, தொடர் விடுமுறை நாட்களில், கூடுதல் எண்ணிக்கையில், அரசின் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
என்றாலும், எதிர்பார்த்ததைவிட பயணியர் கூட்டம் அதிகமாகும் நேரங்களில், பல ஆயிரம் நபர்கள், பேருந்து கிடைக்காமல் அவதியுற்று, போராட்டத்தில் ஈடுபட்ட நிகழ்வுகளும் உண்டு.
இந்நிலையில் இன்று சுதந்திர தினம், நாளை கிருஷ்ண ஜெயந்தி, அடுத்து ஞாயிற்று கிழமை பொது விடுமுறை என, மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், கிளாம்பாக்கத்திலிருந்து, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் நேற்று கூடுதலாக 340- சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஆனால், இரவு 9:00 மணிக்கு மேல், பயணியர் கூட்டம் அதிகரித்தது. இதனால், பலர் பேருந்து கிடைக்காமல், போக்குவரத்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இரவு 10 மணி நிலவரப்படி தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருத்தாச்சலம், திட்டக்குடி, காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, போதிய அளவில் பேருந்துகள் இல்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.
தவிர, முன்பதிவு செய்த பேருந்துகள் சரியான நேரத்தில் வரவில்லை எனவும் பயணியர் புகார் தெரிவித்தனர்.
பாக்ஸ்:
நேற்று கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் வழக்கத்தைவிட நான்கு மடங்கு அதிக எண்ணிக்கையில், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
அதன்படி, 100 போக்குவரத்து போலீசார், சட்டம் ஒழுங்கு உட்பட இதர பிரிவில் 120 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் 7 இன்ஸ்பெக்டர்கள், 20 சப் இன்ஸ்பெக்டர் பணியில் ஈடுபட்டனர்.