ADDED : நவ 19, 2026 09:57 PM
திருவொற்றியூர்: சிலிண்டர்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து, தள்ளுவண்டி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர் பேருந்து நிறுத்தம் அருகே, தள்ளு வண்டி கடைகளில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று (நவ.,18) இரவு சோதனை செய்தனர்.
மெல்லிய பிளாஸ்டிக் பயன்படுத்தி வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர். தள்ளுவண்டி கடையில் இருந்த வீட்டு உபயோக சிலிண்டரை பறிமுதல் செய்தனர்.
ஆத்திரமடைந்த வியாபாரிகள், இட்லி – சாம்பார் உள்ளிட்ட உணவு பொருட்களை, மணலி விரைவு சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். சாத்தாங்காடு போலீசார், அவர்களை சமாதானம் செய்தனர்.
இதற்கிடையில், உதவி பொறியாளர் விகடன் அளித்த புகாரில், மாநகராட்சி அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக, திருவொற்றியூர் கலைஞர் நகரை சேர்ந்த கருப்பசாமி, 39, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த கணேசன், 52 ஆகிய இருவரையும் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.
