'ஸ்மார்ட் சிட்டி' பணி இழுத்தடிப்பு கண்டித்து வணிகர்கள் போராட்டம்
'ஸ்மார்ட் சிட்டி' பணி இழுத்தடிப்பு கண்டித்து வணிகர்கள் போராட்டம்
ADDED : மார் 14, 2026 05:15 AM

வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் மந்தகதியில் நடக்கும் 'ஸ்மார்ட் சிட்டி' நடைபாதை பணிகளால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது என, வணிகர்கள் கண்டன கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 'ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை, எம்.சி.ரோடில், 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை, வளாகம் அமைக்கும் பணி, 2023ல் துவங்கப்பட்டு, இரண்டரை ஆண்டுகளாக நடந்து வருகிறது.
மந்தகதியில் நடக்கும் பணிகளால், அப்பகுதியில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வண்ணாரப்பேட்டை எம்.சி., சாலை மற்றும் ஜி.ஏ., சாலை சுற்றுவட்டார வியாபாரிகள் நலச்சங்கங்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர். ஆனால், பணிகளை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
இந்த நிலையில், 'ஸ்மார்ட் சிட்டி பணியை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும். சாலையை ஆக்கிரமித்து நடுவே வைத்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள், நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில், சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்பதாலும், ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என, குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகள், 300க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தினர்.
இதனால் சாலையோர வியாபாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார்
சமரசம் செய்ய முயன்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
